'கல்குவாரியைத் தடை செய்யுங்கள்; இல்லையேல் நாங்கள் காலிசெய்வோம்'- கலெக்டரிடம் நேரில் குமுறிய மக்கள் | 'Prohibit stone quarry; Otherwise we will evacuate, says public

வெளியிடப்பட்ட நேரம்: 13:10 (04/07/2018)

கடைசி தொடர்பு:13:10 (04/07/2018)

'கல்குவாரியைத் தடை செய்யுங்கள்; இல்லையேல் நாங்கள் காலிசெய்வோம்'- கலெக்டரிடம் நேரில் குமுறிய மக்கள்

``இரவு நேரங்களில், கல்குவாரியால் நித்தமும் செத்துக்கொண்டிருக்கிறோம். நாங்கள் வாழவேண்டும் என்று நினைத்தால், திருவளக்குறிச்சியில் செயல்படும் கல்குவாரிகளுக்குத் தடை விதிக்க வேண்டும். இல்லையேல், குவாரியை நாங்கள் காலிசெய்வோம்" என்று மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனுக்களை அளித்தனர் கிராம மக்கள்.

கல்குவாரி

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட திருவளக்குறிச்சி, பாடாலூர் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுவை அளித்துவிட்டு, பத்திரிகையாளர்களிடம் பேசினார்கள். ”திருவளக்குறிச்சி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்துவருகின்றன. இப்பகுதியில் வசிக்கும் மக்கள், விவசாயம் செய்துவருபவர்கள். மேலும், கால்நடைகளையும் வளர்த்துவருகின்றனர்.

பொதுமக்கள்

அங்கு அமைந்துள்ள கல்குவாரிகளால் பல்வேறு பிரச்னைகள் உருவாகின்றன. கிராமத்துக்கு அருகே அமைந்துள்ள மலைகளிலிருந்து வரும் தண்ணீர், ஏரிக்கு வந்தடையும். இந்த ஏரித் தண்ணீரைக் கொண்டு சுமார் 500 ஏக்கர் பரப்பளவிலான விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றது. ஏரிக்கு மழை நீர் செல்லும் நீர்வழிப்பாதை ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால், ஏரி வறண்டு விவசாயம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

கல்குவாரியால் ஆபத்து

மேலும், பாறைகளை உடைக்க இரவு நேரங்களில் சக்தி வாய்ந்த வெடிமருந்துகளைப் பயன்படுத்துவதால், கட்டடங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. பொதுமக்களும், கால்நடைகளும் பல்வேறு பாதிப்புகளுக்கு ஆளாகிவருகின்றனர். இக்குவாரியால் கிராமம் முழுவதும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் இந்தக் கல்குவாரிகளைத் தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையேல், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்" என்று எச்சரித்தனர்.