வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (04/07/2018)

கடைசி தொடர்பு:15:29 (07/07/2018)

தமிழகத்தில் இடைத் தேர்தலா... பொதுத் தேர்தலா? தீர்மானிக்கும் வழக்கின் கதை!

முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்குச் சவாலாக விளங்கும் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் கதை! 

தமிழகத்தில் இடைத் தேர்தலா... பொதுத் தேர்தலா?  தீர்மானிக்கும் வழக்கின் கதை!

“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை, இதோ... இப்போதே கலைத்துவிடுவோம்; இரண்டு மாதங்களில் தேர்தல் வரப்போகிறது; பழனிசாமி அதில் தோற்று பஞ்சாமிர்தமாகிவிடுவார்; பன்னீர் செல்வம் கண்ணுக்குத் தெரியாமல் கரைந்து போவார்; அதன்பிறகு, ஆட்சியைப் பிடித்து, கட்சியைக் கைப்பற்றி, இரட்டை இலையை மீட்டு, அம்மாவின் ஆட்சியை நடத்துவேன்” என்று வாய்ஜாலம் காட்டினார் டி.டி.வி.தினகரன்!

ஆனால், இன்றுவரை ஒன்றும் நடக்கவில்லை. மாறாக, தினகரனை நம்பி வந்த 18 எம்.எல்.ஏ-க்கள் பதவியைப் பறிகொடுத்ததும், அந்த 18 பேரை தேர்ந்தெடுத்த பொது மக்கள், தங்கள் தொகுதி எம்.எல்.ஏ-வை இழந்ததும்தான் நடந்தது! இப்போதும், எடப்பாடி முதல்வர் நாற்காலியில் சின்ன அதிர்வுகூட இல்லாமல் அமர்ந்திருக்கிறார்; பன்னீர் பவ்யமாக துணை முதல்வர் நாற்காலியைப் பற்றிக்கொண்டார். ஆட்சியும் அவர்களிடம்தான் இருக்கிறது; அ.தி.மு.கவும் அவர்களிடம்தான் இருக்கிறது! இதில் சலசலப்பை ஏற்படுத்தும் சாத்தியக்கூறுகள் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதி நீக்க வழக்குக்கு மட்டுமே உண்டு. அந்த வழக்கும், இரண்டு தனி நீதிபதிகள், தலைமை நீதிபதி அமர்வு எனச் சுற்றி மூன்றாவது நீதிபதியின் அமர்வுக்கு வந்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் நியமித்த மூன்றாவது நீதிபதியை மாற்றிய உச்ச நீதிமன்றம், அவருக்குப் பதில் இந்த வழக்கை, மூன்றாவது நீதிபதியாக சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்யநாராயணா விசாரிப்பார் என்றும் உத்தரவிட்டுள்ளது. இதற்கு மேல், இந்த வழக்கை மேல்முறையீட்டுக்கு எடுத்துப்போவதில்லை என்று தினகரன் தரப்பு முடிவெடுத்துள்ளதால், நீதிபதி சத்யநாராயணா அமர்வோடு 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கு ஒரு முடிவுக்கு வரும் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது. நீதிபதி சத்யநாராயணா அமர்வின் முன் இந்த வழக்கு விசாரணை இன்று மாலை 4 மணிக்கு ஆரம்பிக்க உள்ளது! முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்குச் சவாலாக விளங்கும் 18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கின் கதை! 

18 எம்.எல்.ஏக்கள்

18 எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்கம்!

அ.தி.மு.க சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ-க்களில் 19 பேர், `முதல்வர் எடப்பாடி பழனிசாமிமீது எங்களுக்கு நம்பிக்கையில்லை; டி.டி.வி.தினகரன் தலைமையில் செயல்படுவோம்’ என்று சொல்லி தினகரனை ஆதரிக்க தொடங்கினர். அந்த 19 பேரும், 2017 ஆகஸ்ட் 22-ம் தேதி, கவர்னரிடம் தனி தனியாகக் கொடுத்த கடிதத்தில், `தமிழக முதல்வர் பொறுப்பிலிருந்து எடப்பாடி பழனிசாமியை நீக்கவேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தனர். கொறடா பரிந்துரை! 2017 ஆகஸ்ட் 24-ம் தேதி, அ.தி.மு.க சட்டமன்றத் தலைமை கொறடா ராஜேந்திரன் சபாநாயகர் தனபாலிடம், ``கொறடா உத்தரவு இல்லாமல், முதல்வரை மாற்றச் சொல்லி கவர்னரிடம் கடிதம் கொடுத்த 19 எம்.எல்.ஏ-க்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்” என்று பரிந்துரைத்தார். கொறடாவின் பரிந்துரையை ஏற்று, அன்றே சபாநாயகர் தனபால், 19 எம்.எல்.ஏ-க்களுக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினார். 

ஜகா வாங்கிய ஜக்கையன்! 

சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதும், தினகரன் அணியில் இருந்த எம்.எல்.ஏ ஜக்கையன் மட்டும் பின்வாங்கினார். அவர், ``தினகரன் அணி எம்.எல்.ஏ-க்கள் என் சம்மதம் இல்லாமல், என்னைக் கட்டாயப்படுத்தி கடிதம் கொடுக்க வைத்தனர்” என சபாநாயகரிடம் விளக்கம் கொடுத்தார். இதையடுத்து, ஜக்கையனை சபாநாயகர் மன்னித்தார். 

18 எம்.எல்.ஏ-க்கள் காலி!

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்

சபாநாயகர் நோட்டீஸுக்கு உரிய விளக்கம் கொடுக்காததால், 2017 செப்டம்பர் 18-ம் தேதி, 18 எம்.எல்.ஏ-க்களையும் தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவு பிறப்பித்தார். அதுபற்றி தேர்தல் ஆணையத்துக்கும் உடனடியாகக் கடிதம் அனுப்பப்பட்டது. இதையடுத்து, தேர்தல் ஆணையம் அந்த 18 தொகுதிகளையும் எம்.எல்.ஏ-க்கள் இல்லாத தொகுதியாக அறிவித்தது. 

வழக்கு ஆரம்பம்! 

சபாநாயகரின் உத்தரவை எதிர்த்து, 18 எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். செப்டம்பர் 20-ம் தேதி அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி துரைசாமி, ``இதில் மறு உத்தரவு பிறப்பிக்கும்வரை காலியான தொகுதிகளில் தேர்தல் நடத்தவும், சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தவும் தடை விதித்தார். 

தனி நீதிபதி டு தனி நீதிபதி டு தலைமை நீதிபதி! 

நீதிபதி துரைசாமியிடம் இருந்த வழக்கு, அக்டோபர் மாதம் முதல் மற்றொரு தனி நீதிபதியான ரவிச்சந்திரபாபு அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரிக்கத் தொடங்கிய நீதிபதி ரவிச்சந்திரபாபு, நவம்பர் 2-ம் தேதி ``இந்த வழக்கை தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்ற பரிந்துரைக்கிறேன்” எனக் குறிப்பிட்டார். இதையடுத்து நவம்பர் 6-ம் தேதி 18 எம்.எல்.ஏ-க்களும் சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் மனுத்தாக்கல் செய்தனர். 

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி இந்திரா  பானர்ஜி

3 மாதம் விசாரணை! 4 மாதம் கழித்து தீர்ப்பு!

நவம்பர் 16-ம் தேதி இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கிய தலைமை நீதிபதி அமர்வில், மூன்று மாதங்கள் இந்த வழக்கு நடைபெற்றது. 2018 ஜனவரி 23-ம் தேதி இரண்டு தரப்பிலும் எழுத்துபூர்வமான வாதங்கள் தாக்கல் செய்யப்பட்டன. அன்றே, தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. ஆனால், அதன்பிறகு 4 மாதங்கள் கடந்தும் தீர்ப்பு வெளியாகாமல் இருந்தது. அதையடுத்து, 2018 ஜூன் 14-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 14-ம் தேதி மதியம் 1.30 மணிக்கு, தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, மற்றொரு நீதிபதி சுந்தர் தீர்ப்பை அறிவித்தனர். தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, ``சபாநாயகரின் அதிகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது. அதனால், 18 எம்.எல்.ஏ-க்களின் தகுதி நீக்கத்தை ரத்து செய்ய முடியாது என்று குறிப்பிட்டார். மற்றொரு நீதிபதி சுந்தர், ``உரிய சட்ட நடைமுறைகளை சபாநாயகர் பின்பற்றவில்லை; அதனால், சபாநாயகரின் உத்தரவை ரத்து செய்கிறேன்” என்று அறிவித்தார். இப்படி இரண்டு நீதிபதிகளும் மாறுபட்ட உத்தரவை வழங்கியதால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அமர்வுக்குப் போனது. 

தங்க தமிழ்ச்செல்வன் தனி ஆவர்த்தனம்!

இதையடுத்து, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் ஒருவரான தங்க தமிழ்ச்செல்வன், நீதிமன்றத்தைக் கடுமையாக விமர்சித்ததுடன், தான் இந்த வழக்கிலிருந்து வாபஸ் பெற்றுக்கொள்வதாக அறிவித்தார். இதற்கிடையில், ஜூன் 18-ம் தேதி, சென்னை உயர் நீதிமன்றம் எம்.எல்.ஏ-க்கள் தகுதிநீக்க வழக்கை விசாரிப்பதற்காக தனி நீதிபதி விமலாவை நியமனம் செய்தது. 

நீதிபதி சத்ய நாராயணாவின் கைகளில்!

ஜூன் 21-ம் தேதி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 17 பேரும் உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தனர். அதில், ``தகுதி நீக்க நீதிபதி சத்ய நாராயணாவழக்கை விசாரிக்க நியமிக்கப்பட்டுள்ள மூன்றாவது நீதிபதிமீது தங்களுக்கு நம்பிக்கையில்லை. மேலும், சென்னை உயர் நீதிமன்றம் இந்த வழக்கில் காலதாமதம் செய்கிறது. எனவே, உச்ச நீதிமன்றமே இந்த வழக்கை விசாரிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தனர். 

ஜூன்  26-ம் தேதி உச்ச நீதிமன்றம் மனுவை ஏற்றுக்கொண்டு, இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதாக அறிவித்தது. ஜூன் 27-ம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சய் கிஷன் கௌல் அடங்கிய அமர்வு வழக்கை விசாரித்து அளித்த உத்தரவில், ``சென்னை உயர் நீதிமன்றம் நியமித்துள்ள மூன்றாவது நீதிபதி விமலாவை ரத்து செய்தது. அதோடு இந்த வழக்கை நீதிபதி சத்யநாராயணா விசாரித்து விரைவில் தீர்ப்புக் கொடுப்பார்” என்று குறிப்பிட்டது. தீர்ப்பை வழங்குவதற்கு முன் உச்ச நீதிமன்ற நீதிபதிகள், ``தினகரன் தரப்பு தாக்கல் செய்துள்ள மனுவில், நீதிபதிகள் காலதாமதம் செய்வது உள்பட கூறப்பட்டுள்ள அவதூறுகளை வாபஸ் வாங்க வேண்டும்” என்று குறிப்பிட்டனர். அதை ஏற்று 17 பேருக்கு ஆஜரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் விகாஷ் சிங், அந்த வார்த்தைகளை வாபாஸ் பெற்றுக்கொண்டு, அது தொடர்பான நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வதாகவும் உறுதி அளித்தார். 

சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சத்யா நாராயணா 18 எம்.எல்.ஏ-க்கள் வழக்கின் விசாரணையை  இன்று மாலை 4 மணிக்குத் தொடங்க உள்ளார். நீதிபதி சத்ய நாராயணாவின் தீர்ப்பில்தான், 18 தொகுதிகளுக்கு இடைத்தேர்தலா... தமிழகத்துக்கே பொதுத் தேர்தலா என இழுத்தடிக்கப்படும் கேள்விக்கான பதில் இருக்கிறது! 
 


டிரெண்டிங் @ விகடன்