வெளியிடப்பட்ட நேரம்: 14:19 (04/07/2018)

கடைசி தொடர்பு:14:44 (04/07/2018)

ராயப்பேட்டை ரவுடி ஆனந்தனை என்கவுன்ட்டர் செய்தது எப்படி? விவரிக்கும் ஆபரேஷன் `ஆர்.ஏ'

ரவுடி ஆனந்தன் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் மாஜிஸ்திரேட் விசாரணை

ராயப்பேட்டை ரவுடி  ஆனந்தன், என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தை திகிலுடன் விவரித்தனர், என்கவுன்ட்டர் ஆபரேஷன் டீமில் உள்ள போலீஸார். 

சென்னையில், ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு என்கவுன்ட்டர் நடந்திருப்பது விவாதமாக மாறியிருக்கிறது. காவலரைத் தாக்கியதும் போலீஸார் என்கவுன்ட்டர் ஆயுதத்தைக் கையில் எடுத்துள்ளனர் என்கின்றனர் மனித உரிமை ஆர்வலர்கள். தினமும் செயின் பறிப்பு, செல்போன் பறிப்பு போன்ற வழிப்பறி சம்பவங்கள் நடந்தபோதுகூட அமைதியாக இருந்த தமிழகக் காவல்துறை, தற்போது என்கவுன்ட்டரில் ரவுடி ஆனந்தனை சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ராயப்பேட்டை போலீஸ் நிலைய ரவுடிகள் சரித்திரப் பதிவேட்டில் 2013-ம் ஆண்டில்தான் ஆனந்தனின் பெயர் சேர்க்கப்பட்டது. அதே பகுதியில் உள்ள பி.எம். தர்கா குடிசை மாற்று வாரியக் குடியிருப்பில் குடும்பத்துடன் குடியிருந்த 22 வயதாகும் அவர், சிறையில் பாதி, வெளியில் பாதி நாள் என்று இருந்தார். பள்ளிப் பருவத்திலேயே கூடா நட்பு கேடாய் முடிந்ததுபோல, ஆனந்தனின் நட்புதான் அவரை இந்தப் பாதையில் அழைத்துச்சென்றுவிட்டது என்கின்றனர், அந்தப்பகுதி மக்கள். ஆனந்தனின் அப்பா அசோக் கூலித் தொழிலாளி. ஆனால்,  நண்பர்களாலே, ஆனந்தன் ரவுடியாக அந்தப் பகுதியில் உருவெடுத்தார். அவரைத் தொடர்ந்து அவரின் சகோதரர் அருண் மீதும் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 

சம்பவத்தன்று, வீட்டின் அருகில்தான் ஆனந்தன் தன்னுடைய நண்பர்களுடன் மதுபோதையில் பேசிக்கொண்டிருந்துள்ளார். போதையில் பெண்களைக் கிண்டல்செய்ததால், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு போனில் தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், காவலர் ராஜவேலு அங்கு வந்து, ஆனந்தன் மற்றும் அவருடன் இருந்தவர்களை அங்கிருந்து செல்லும்படி கூறியுள்ளார். அதில், ராஜவேலுக்கும் ஆனந்தன் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. 

இந்தச் சூழ்நிலையில்தான், ஆத்திரத்தில் ராஜவேலுவை ஆனந்தன் தரப்பினர் சரமாரியாக வெட்டியுள்ளனர். இந்த வழக்கை துரிதமாக துப்புதுலக்கிய உதவி கமிஷனர் வினோத்சாந்தாராம் டீம், நள்ளிரவிலேயே ஆறு பேரைப் பிடித்துவிட்டனர். போலீஸார் பிடிக்கும்போது இரண்டு பேருக்கு காயம் ஏற்பட்டது. அதன்பிறகுதான் ரவுடி ஆனந்தனைப்பிடிக்க `ஆர்.ஏ' என்ற சீக்ரெட் கோடுடன் உதவி கமிஷனர் சுதர்சன் தலைமையில் போலீஸ் டீம் அமைக்கப்பட்டது. காவலர் ராஜவேலுவை சரமாரியாக அரிவாளால் வெட்டிய ஆனந்தனைப் பிடிக்க, தயார் நிலையில் போலீஸார் இருந்துள்ளனர். அந்த டீமில் துணிச்சலுக்குப் பெயர்போன சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா களமிறக்கப்பட்டார்.

மாஜிஸ்திரேட் விசாரணை

``துப்பாக்கிகளோடு ரவுடி ஆனந்தன் மற்றும் அவருடன் தலைமறைவாக இருக்கும் ரவுடிகளைத் தேடினோம். கிண்டி பகுதியில் ஆனந்தன் பதுங்கியிருக்கும் தகவல் கிடைத்ததும், அங்கு விரைந்தோம். எங்களிடம் ஆனந்தன் சிக்கியதும் அவரிடம் வாக்கிடாக்கி குறித்து விசாரித்தோம். அப்போது, தரமணியில் உள்ள புதரில் வாக்கிடாக்கியைப் புதைத்துவைத்துள்ளேன் என்று ஆனந்தன் தெரிவித்தார். உடனே வாக்கிடாக்கியை மீட்க போலீஸ் டீம் ஆனந்தனை அழைத்துக்கொண்டு அங்கு சென்றோம். இரவு நேரம் என்பதால் கும்மிருட்டாக அந்தப் பகுதி காணப்பட்டது. போலீஸாரின் வாகன முகப்பு வெளிச்சம், செல்போன் டார்ச் லைட் உதவியுடன் வாக்கி டாக்கியை எடுக்க அங்கு சென்றோம். வாக்கி டாக்கி இருக்கும் இடத்தைக் காண்பித்த ஆனந்தன், அதை எடுக்க முயன்றார். அப்போது வாக்கி டாக்கிக்குப் பதில் அரிவாளை எடுத்த ஆனந்தன், அருகில் நின்ற இளையராஜாவை வெட்டினார். அதை எஸ்.ஐ., இளையராஜா தடுத்தபோது, அவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.  உடனடியாக துப்பாக்கி முனையில் ஆனந்தனை எச்சரித்தோம். ஆனால், ஆனந்தன் அரிவாளால்  மிரட்டியபடி அங்கிருந்து தப்பி ஓட முயன்றார். 

 ரவுடி ஆனந்தனை சுட்டுக்கொன்ற எஸ்.ஐ.அதைப் பார்த்த உதவி கமிஷனர் சுதர்சன், இன்ஸ்பெக்டர் டில்லிபாபு மற்றும் போலீஸார் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தனர். இளையராஜாவின் பிடியிலிருந்து தப்பிய ஆனந்தனின் உருவம் இருட்டில்  மறையத் தொடங்கியது. அவரைப் பிடிக்க  இளையராஜா உள்பட போலீஸார் விரட்டினர். இளையராஜாவின் பிடியில் மீண்டும் ஆனந்தன் சிக்கியதும் அடுத்த தாக்குதலில் அவர் ஈடுபட்டார். இதனால்தான் இளையராஜாவின் துப்பாக்கியிலிருந்து குண்டு புறப்பட்டு, ஆனந்தனின் இடது மார்பு பகுதியில் துளைத்தது. ஆனந்தன் விழுந்த இடம், அங்கு சிதறிக்கிடந்த ரத்தம், ஆனந்தனை எங்கிருந்து இளையராஜா துப்பாக்கியால் சுட்டார் உள்ளிட்ட தகவல்களை போலீஸார் கேட்டறிந்தனர். வாக்கிடாக்கி புதைத்துவைக்கப்பட்ட இடத்தை அதிகாரிகள் ஆய்வுசெய்தனர். ஆனந்தன், அரிவாளால் எஸ்.ஐ, இளையராஜாவைத் தாக்கியதும் அந்த இடமே போர்க்களமானது.  ஆனந்தனின் தாக்குதலில் நிலைகுலைந்த இளையராஜா, வெட்டுக்காயங்களுடன் அவருடன் கடைசி வரை போராடினார்'' என்கின்றனர்  என்கவுன்ட்டர் `ஆபரேஷன் ஆர்.ஏ' டீமில் உள்ள போலீஸார். 

 என்கவுன்ட்டர் நடந்த இடத்துக்கு சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் சாண்டில்யன் இன்று ஆய்வு நடத்தினார். தொடர்ந்து ஆனந்தனின் சடலம் பிரேதப் பரிசோதனை நடந்த அரசு மருத்துவமனையிலும் அவர் ஆய்வுசெய்தார். பிறகு, எஸ்.ஐ., இளையராஜாவிடம் விசாரணை நடத்தியுள்ளார். என்கவுன்ட்டர் நடந்த இடத்தைச் சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இது குறித்து பேராசிரியர் அ.மார்க்ஸிடம் பேசினோம். "சென்னையில் சில ஆண்டுகளுக்கு முன்பு வங்கி கொள்ளையர்களை போலீஸார் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொன்றனர். அது, என்கவுன்ட்டர் அல்ல... கொலை. ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்தின்போதும் போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி அப்பாவி மக்களை கொன்றனர். இதைப்பார்க்கும்போது போலீஸார்மீது மக்களுக்கு ஒருவித அச்சஉணர்வு ஏற்பட்டுள்ளது. தற்போது, ஆனந்தனை என்கவுன்ட்டரில் போலீஸார், சுட்டுக்கொன்றுள்ளனர். அதற்கு போலீஸார் சொல்லும் தகவல் நம்பும்படியாக இல்லை. என்கவுன்ட்டரைப் பொறுத்தவரை உச்சநீதிமன்றமும் மனித உரிமை ஆணையமும் சில விதிமுறைகளை வகுத்துள்ளது. அதில், என்கவுன்ட்டர் சம்பவத்தில் போலீஸாரைத் தாக்கியவர் மீது ஒரு எப்.ஐ.ஆரும், என்கவுன்ட்டர் செய்த போலீஸார் மீது ஒரு எப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் அதையெல்லாம் போலீஸார் கண்டுக்கொள்வதில்லை" என்றார்.