வெளியிடப்பட்ட நேரம்: 15:38 (04/07/2018)

கடைசி தொடர்பு:15:23 (07/07/2018)

``எடப்பாடியை, மக்கள் தமிழகத்தைவிட்டே விரட்டியடிப்பார்கள்!'' - மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் பாலகிருஷ்ணன்

பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்ல, குற்றவாளிகளுக்கு விலங்கு போடும்வரை போராடும் கட்சி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

``எடப்பாடியை, மக்கள் தமிழகத்தைவிட்டே விரட்டியடிப்பார்கள்!'' - மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட்  பாலகிருஷ்ணன்

``எடப்பாடி பழனிசாமி அவர்களே எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உங்களை, மக்கள் தமிழகத்தைவிட்டே விரட்டியடிப்பார்கள்'' என்று மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் பேசியுள்ளார்.

மார்க்ஸிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சியின் சார்பாக, `பெண்கள், சிறுமிகள் மீதான பாலியல் வன்முறை ஒழிப்பு மாநில மாநாடு' சேலம் கோட்டை மைதானத்தில் நடைபெற்றது. இதில் மார்க்ஸிஸ்ட் கமியூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி, மாநிலக் குழு உறுப்பினர் செல்வ சிங், மாவட்டச் செயலாளர் ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். இந்த மாநாட்டுக்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தோழர்கள் வந்திருந்தனர்.

இக்கூட்டத்தில் பேசிய உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அஜீதா, ``உலகத்திலேயே பெண்கள் வாழத் தகுதியில்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது. இது, அனைவருக்கும் தலைகுணிவு. குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமை சம்பந்தமாகக் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், போக்சோ - 2012 சட்டத்தின்படி  மாவட்டக் காவல் துறை கண்காணிப்பாளரையும் குற்றவாளியாகச் சேர்க்க முடியும்'' என்றார்.

எடப்பாடியை விமர்சித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

அடுத்து பேசிய மத்தியக் குழு உறுப்பினர் வாசுகி, ``சுதந்திரமாகச் சுற்றித்திரிந்த பெண்களை நாளடைவில் அடிமையாக்கிய பெருமை புராதன, இதிகாச கட்டுக்கதைகளையே சேரும். இதுவே, பெண்களை அடிமைகளாக நிலைநிறுத்தியிருக்கிறது. தமிழகத்தில் தந்தை பெரியார் பெண் உரிமைகளுக்காக வாழ்நாள் முழுவதும் ஒரு யுத்தமாகவே போராடினார். சிங்காரவேலர் தன் எழுத்துகள் மூலமாகப் பெண் உரிமையை நிலைநாட்டினார்.

`புவியை நடத்து... அது பொதுவில் நடத்து' என்றார் பாரதிதாசன். ஆனால், நாம் இந்த வரிகளை வர்க்கபேதமாகவே கருதுகிறோம். பாலின பாகுபாடாக எடுத்துக்கொள்வதில்லை. இதனால், பொது இடங்களில் பெண்களுக்கு இடமில்லை. எங்கெல்லாம் கம்யூனிஸ்ட்களுக்கு இடம் கிடைக்கிறதோ, அங்கெல்லாம் பெண் உரிமைகளுக்காகக் குரல்கொடுத்து வருகிறோம்.

குடும்பக் கட்டமைப்பு ஜனநாயகப்படுத்தப்பட வேண்டும் என்று சொன்ன ஒரே கட்சி கம்யூனிஸ்ட். கமலாபாஸ் என்ற நாவலாசிரியர், `கர்ப்பப்பை இருப்பவர்களால் மட்டும் குழந்தைகள் பெற முடியும். ஆனால், கைகள் இருப்பவர்கள் அனைவரும் சமையல், வீட்டு வேலைகளைச் செய்யலாம்' என்றார். குடும்பங்களில் ஆண், பெண் இருவரும் சமமாகப் பணிகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

மனுநீதி அது அநீதி. இந்துத்துவாவுக்குள் பார்ப்பனியம் இருக்கும். பார்ப்பனியத்துக்குள் மதவெறி, சாதிவெறி, ஆதிக்கவெறி இருக்கும். ஆளும் பி.ஜே.பி., இந்துத்துவாவை ஆதரிக்கிறது. அதனால் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பெண்கள் யாருக்கும் பாதுகாப்பு இருக்காது. அதனால் இந்த ஆட்சி நீடிப்பது பொதுமக்களுக்குப் பாதுகாப்பு இல்லை'' என்றார்.

இறுதியாகப் பேசிய மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன், ``பெண் உரிமைகளுக்காகப் போராடும் கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. அதிக பாலியல் குற்றச்சாட்டு உள்ள கட்சி பி.ஜே.பி.. மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் இல்லையென்றால், பெண்களை என்ன வேண்டுமென்றாலும் செய்யலாம் என்ற நிலை உருவாகியிருக்கும். பாலியல் வன்முறைக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்ல, குற்றவாளிகளுக்கு விலங்கு போடும்வரை போராடும் கட்சி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

வரும் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தில் பெண்களுக்கு இன்னும் சுதந்திரம் கிடைக்கவில்லை என்று தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மனிதச் சங்கலிப் போராட்டம் நடத்தப்படும். சேலம் உலகளவில் பேசும் பொருளாக மாறிவிட்டது. இது, முதல்வரின் மாவட்டம் என்பதால் மட்டுமல்ல... பசுமைச் சாலை அமைப்பதாகச் சொல்லி மக்களைக் கொடுமைப்படுத்தும் நபராக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மாறிவிட்டார்.

எடப்பாடி பழனிசாமி அவர்களே எழுதி வைத்துக்கொள்ளுங்கள். உங்களை மக்கள் தமிழகத்தைவிட்டே விரட்டியடிப்பார்கள். கனிமக் கொள்ளை அடிப்பவன், கள்ளக்கடத்தல் செய்பவன், கஞ்சா விற்பவன், கான்ட்ராக்ட் கமிஷன் எடுப்பவன் என எல்லோரும் நிம்மதியாக இருக்கிறார்கள். இன்னும் எத்தனை நாள் காவல் துறை உங்களுக்குப் பாதுகாப்பாக இருக்கும்?

ஏற்கெனவே 13 பேரைச் சுட்டுக்கொன்றீர்கள். வளர்ச்சி யாருக்கு வேண்டும்? சேலம் டு சென்னைக்கு 3 பேருந்து சாலைகள், 2 ரயில் வழிச் சாலைகள், ஒரு விமான சேவை இருக்கும்போது எதற்கு 8 வழிச் சாலை? எடப்பாடி பழனிசாமி குடும்பத்துக்குப் பயன்படும் சாலையாக இது இருக்கும். 8 வழிச் சாலை தேவையில்லை என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

பெண்களின் அணிகலன்களாகச் சொல்லப்படும் அச்சம், ஞானம், மடந்தை, பயிற்பு இவை நான்கும் அடித்துப் பொடிபொடியாக வேண்டும். மனுநீதி ஒழிக்கப்பட வேண்டும். மார்ச் 8 உலக மகளிர் தினத்தில் பெண்கள் நிகழ்ச்சிகள் நடத்திக்கொண்டாடுவதைவிடத் தங்கள் உரிமைகளுக்கான போராட்டத் தினமாக கருதிப் போராட வேண்டும்'' என்றார்.