தலைமைக்குக் கட்டுப்படாத 17 ஒ.செக்கள்! - ஸ்டாலினை சீண்டிய மா.செக்கள் மாற்றம்

' இந்த எதிர்ப்புகளை எல்லாம் சமாளிப்பதைப் பொறுத்துதான் உண்மையிலேயே தலைமைப் பொறுப்பில் ஸ்டாலின் இருக்கிறாரா என்பது தெரிய வரும்" என்கிறார் தி.மு.கவின் மூத்த நிர்வாகி ஒருவர்

தலைமைக்குக் கட்டுப்படாத 17 ஒ.செக்கள்! - ஸ்டாலினை சீண்டிய மா.செக்கள் மாற்றம்

தென்மண்டல தி.மு.க நிர்வாகிகள் மாற்றத்தில் ஏற்பட்டுள்ள அதிருப்திகளை செயல் தலைவர் ஸ்டாலின் கண்டுகொள்ளவில்லை. "அறிவாலயத்துக்கு வருவதன் மூலம், செயல் தலைவரின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்குகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதே அதிருப்தி நீடித்தால், அடுத்து என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை" என ஆதங்கப்படுகின்றனர் அறிவாலய நிர்வாகிகள். 

மதுரை, தேனி, ராமநாதபுரம் உள்ளிட்ட தென் மாவட்டங்களில் உள்ள தி.மு.க. நிர்வாகிகளை மாற்றியமைத்து அறிக்கை வெளியிட்டிருந்தார் பொதுச் செயலாளர் அன்பழகன். அவரது அறிவிப்பில், ' தேனி மாவட்ட கழக பொறுப்பாளர் எம்.ஜெயக்குமார், அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கம்பம் ராமகிருஷ்ணன் தேனி மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் சுப.த.திவாகரன் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு, அவருக்கு பதிலாக கே.முத்துராமலிங்கம், ராமநாதபுரம் மாவட்ட கழக பொறுப்பாளராக நியமிக்கப்படுகிறார். இதேபோல், மதுரை மாநகர், மதுரை வடக்கு, மதுரை தெற்கு, தேனி, சிவகங்கை, ராமநாதபுரம், திருநெல்வேலி கிழக்கு, திருநெல்வேலி மேற்கு, திருநெல்வேலி மத்தி, தூத்துக்குடி வடக்கு, தூத்துக்குடி தெற்கு, கன்னியாகுமரி கிழக்கு, கன்னியாகுமரி மேற்கு ஆகிய மாவட்டங்களில் சில ஒன்றிய கழக செயலாளர்களும் மாற்றப்பட்டு, அவர்களுக்கு பதிலாக புதிதாக ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்' எனக் குறிப்பிட்டிருந்தார். இந்தத் திடீர் மாற்றம், மூன்று மாவட்டங்களிலும் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. 

குறிப்பாக, ராமநாதபுரம் மாவட்ட செயலாளர் சுப.த.திவாகரனின் மாற்றத்தை ரசிக்காத 17 ஒன்றிய செயலாளர்கள் நேற்று அறிவாலயத்தில் குவிந்தனர். ' செயல் தலைவரைப் பார்த்துவிட்டுத்தான் செல்வோம். புதிதாக நியமிக்கப்பட்ட மா.செ முத்துராமலிங்கம் யார் என்றே கட்சிக்காரர்களுக்குத் தெரியாது. திவாகரனை மாற்றியது தவறு' என அவர்கள் கொந்தளித்துள்ளனர். அவர்களது குற்றச்சாட்டுகளைக் கேட்டறிந்த அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ' செயல் தலைவரை சந்திக்க முடியாது. என்ன புகாரோ அதை மனுவாக எழுதிக் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்' எனக் கூறிவிட்டார். 

Anna arivalayam

இதுகுறித்து ராமநாதபுரம் மாவட்ட தி.மு.க சீனியர் ஒருவரிடம் பேசினோம். " 25 ஆண்டுகளாக மாவட்டத்தைக் கட்டி ஆண்டு வந்தார் சுப.தங்கவேலன். அவருடைய மகன் திவாகரன், கடந்த 2014-ம் ஆண்டு மா.செ பதவிக்கு நியமிக்கப்பட்டார். அவருடைய பதவி பறிப்புக்கு எதிராக ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம், பரமக்குடி, திருவாடனை, கமுதி, சாயல்குடி, முதுகுளத்தூர் உள்பட 17 ஒன்றியங்களின் செயலாளர்கள் போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். மாவட்டத்தில் 18 ஒ.செக்களில் 12 பேர் ஒரே சமுதாயத்தைச்  சேர்ந்தவர்கள். அதனால்தான் அவர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அறிவாலயத்துக்குச் செல்ல முடிகிறது. திவாகரனுக்குப் பின்னடைவு ஏற்படக் காரணமே தலைமை செயற்குழு உறுப்பினராக இருக்கும் ஒரு நபர்தான். அந்த நபரின் வழிகாட்டுதலில்தான் ராமநாதபுர தி.மு.கவையை சீரழித்துவிட்டனர். ராமநாதபுரம், மண்டபம், ராமேஸ்வரம் ஆகிய ஒன்றியங்களில் இந்த நபர் கைகாட்டும் ஆள்களுக்குத்தான் பதவி கிடைக்கும். கட்சியின் கொள்கை என்னவென்றே தெரியாத ஆள்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு பதவிகளைக் கொடுத்தனர். ஒரே குடும்பத்தில் பத்து பேர் பதவியில் இருப்பதெல்லாம் இங்கு மட்டும்தான் சாத்தியம். இந்த மாற்றம் சரியானதுதான். அதேநேரம், முன்னாள் எம்.எல்.ஏ காதர்பாட்ஷாவின் மகன் முத்துராமலிங்கத்துக்குப் பதவி கிடைத்திருக்கிறது. அவர் யார் என்றே கட்சிக்காரர்களுக்குத் தெரியாது. 'அவர் காதர்பாட்ஷாவின் மகன்' என தலைமையில் உள்ள சிலருக்குத் தெரியும். எந்தவொரு கூட்டத்துக்கும் அவர் வந்தது கிடையாது. எந்தப் போராட்டத்திலும் அவர் பங்கேற்றது கிடையாது. அவருக்குப் பதவி கிடைத்த மர்மமும் தெரியவில்லை" என்கின்றனர். 

அறிவாலயத்தில் ஒ.செக்கள் குவிந்தது குறித்து நம்மிடம் பேசிய தி.மு.க நிர்வாகி ஒருவர், " அறிவாலயத்தில் நடந்த ஆய்வுக்குப் பிறகு, புகாருக்கு ஆளான நிர்வாகிகள் மீது விசாரணைக் குழு ஒன்று நேரடியாக ஆய்வு நடத்தியது. இதன் விவரங்களை ஸ்டாலின் கவனத்துக்கும் கொண்டு சென்றனர். அதன் அடிப்படையில்தான் மா.செக்கள் மாற்றம் நடந்தது. ஆனால், புதிய நிர்வாகிகளின் மாற்றத்தை அமைதியாகக் கடந்து செல்லாமல், 17 ஒ.செக்களும் அறிவாலயம் வந்துவிட்டதை ஸ்டாலின் விரும்பவில்லை. ஸ்டாலினை நோக்கி அவர்கள் வெளிப்படையாகவே குற்றம் சுமத்துகின்றனர். இதுதான் பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. ஆக்டிவ் அரசியலில் கலைஞர் இருந்தவரையில் இப்படியெல்லாம் நடந்தது கிடையாது. நிர்வாகிகள் மாற்றத்தில் அதிருப்தி இருந்தாலும், தலைமையின் முடிவுக்குக் கட்டுப்பட்டு அமைதியாக இருப்பார்கள். அதையும் தாண்டி அறிவாலயம் வந்தாலும், ' நான் பார்த்துக்கறேன். போய் வேலையப் பாருய்யா' என அனுப்பி வைத்துவிடுவார் கருணாநிதி.

இப்போது சில மாவட்டங்களின் நிர்வாகிகள், தங்களின் செல்வாக்கை நிலைநிறுத்த கனிமொழி, அழகிரி என ஆப்ஷன்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர். இவர்களை நேரடியாக சந்தித்தும் சில நிர்வாகிகள் பேசி வருகின்றனர். அறிவாலயத்துக்கு வருவதன் மூலம், செயல் தலைவரின் ஆளுமையை கேள்விக்குள்ளாக்குகின்றனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் இதே அதிருப்தி நீடித்தால், அடுத்து என்ன நடக்கும் என்பதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. மேலும், தேனி மாவட்டத்தில் கம்பம் ராமகிருஷ்ணனை மா.செ பதவிக்குக் கொண்டு வந்துள்ளனர். இதன்மூலம், ' குறிப்பிட்ட சமூகத்தை ஸ்டாலின் ஒதுக்குகிறார்' என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. இந்த எதிர்ப்புகளை எல்லாம் சமாளிப்பதைப் பொறுத்துதான் உண்மையிலேயே தலைமைப் பொறுப்பில் ஸ்டாலின் இருக்கிறாரா என்பது தெரிய வரும்" என்றார் அமைதியாக. 
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!