காதலை நிரூபிக்கச் சொன்ன காதலியின் தந்தை... இளைஞர் எடுத்த விபரீத முடிவு!

மத்தியப் பிரதேசத்தில் காதலியின் தந்தையிடம் காதலை நிரூபிக்கத் துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார் இளைஞர் ஒருவர். 

துப்பாக்கியால் சுட்ட இளைஞர்

மத்தியப்பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் அதுல் லோஹண்டே( Atul Lokhande). பா.ஜ.க பிரமுகரான இவர் அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதலுக்கு பெண் வீட்டில் எதிர்ப்பு இருந்ததாகத் தெரிகிறது. நேற்று இரவு 9.30 மணியளவில் அந்தப் பெண்ணின் வீட்டுக்குச் சென்ற அதுல் தான் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து அவரின் காதலி அதுலை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

இதுதொடர்பாக அதுலின் நண்பர்கள் கூறுகையில், "அதுலும் அந்தப் பெண்ணும் கடந்த 13 வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். இவர்களது காதல் விவகாரம் தெரியவர முதலில் அந்தப்பெண்ணின் தந்தை மறுத்துள்ளார். பிறகு அதுலிடம் “நீ இறந்து உனது காதலை நீரூப்பித்துக்காட்டு அப்படி நிரூபிக்கும் பட்சத்தில் இருவருக்கும் திருமணம் செய்து வைக்கிறேன்” எனக் கூறியதாகத் தெரிகிறது. இதன் காரணமாகவே அதுல் தனது காதலை நிரூபிக்க காதலியின் வீட்டுக்குச் சென்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார்" என்றனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதுல் மூளைச்சாவு அடைந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதுவரை இந்தச் சம்பவத்தில் யார் மீதும் வழக்கு பதிவு செய்யப்படவில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!