`மன்னிப்புக் கேட்கச் சொல்லுங்கள் முதல்வரை!’ - போர்க்கொடி தூக்கும் தலைமையாசிரியை

`அந்த ஆசிரியையைக் கைது செய்யுங்கள். அவரை வேலையிலிருந்து சஸ்பெண்ட் செய்கிறேன்'’ - மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டமொன்றில், தனக்கு டிரான்ஸ்ஃபர் கேட்ட ஆசிரியையை நோக்கி, உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்தர சிங் ராவத்  (Trivendra Singh Rawat)  அதிகாரத்துடன் சொன்ன வார்த்தைகள் இவை. சில தினங்களுக்கு முன்பு  உத்தரகாண்ட்டில் நடந்துள்ளது இந்தச் சம்பவம்.

தலைமையாசிரியை  பகுகுணா

அந்த ஆசிரியையின் பெயர் உத்தரா பகுகுணா. வயது 57. உத்தரகாசி மாவட்டத்திலுள்ள நகான் கிராமத்தில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வருகிறார். ``கடந்த 25 வருடங்களாக அடிப்படை வசதிகள்கூட இல்லாத குக்கிராமங்களிலேயே பணியாற்றி வருகிறேன். தற்போது என் கணவரும் இறந்துவிட்டார். எனக்கும் வயதாகிவிட்டதால் என் மகனுடன் வசிக்க விரும்புகிறேன். அதனால், என்னை நகரத்தில் இருக்கிற பள்ளிக்கூடம் ஒன்றுக்கு இடமாற்றம் செய்யுங்கள்'' என்று அந்த மாநிலத்தின் கல்வித்துறைக்கு தொடர்ந்து பல கடிதம் எழுதி வந்திருக்கிறார். அதற்கெல்லாம் எந்தப் பதிலும் கிடைக்காததால் மனம் நொந்து இருந்திருக்கிறார் ஆசிரியை பகுகுணா. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு, உத்தரகாண்ட் முதல்வர்  மக்கள் குறைத்தீர்ப்பு கூட்டத்தை நடத்தப் போவதை அறிந்துகொண்டவர், அங்கு சென்று முதல்வரிடம் முறையிட்டால் தன் குறை தீரும் என்ற நம்பிக்கையில், கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய முறை வரும்போது தன் பிரச்னையைச் சொல்லியிருக்கிறார். `அது கல்வித்துறையிடம் பேச வேண்டிய விஷயம்' என்று முதல்வர் சொல்ல, அங்கு எனக்கு நியாயம் கிடைக்கவில்லை. நீங்களாவது, என்னை நகருக்கு மாற்றுங்கள் என்று உரக்கக் கத்தியிருக்கிறார். அதன் பிறகு நடந்ததுதான் இந்தக் கட்டுரையின் மேலே சொல்லப்பட்டது. 

 உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்தர சிங் ராவத்

இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், உத்தரகாண்ட் முதல்வரின் மனைவியும் ஓர் ஆசிரியைதான். அவர் நகரின் மையப்பகுதியில் இருக்கிற பள்ளிக்கூடமொன்றில் தொடர்ந்து 22 வருடங்களாக இடமாறுதலே இல்லாமல் பணிபுரிகிறார் என்பதுதான். 

தற்போது ஆசிரியை பகுகுணா, தன்னை கைது செய்ய உத்தரவிட்டதற்கு முதல்வர் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று முழங்கி வருகிறார். 

படங்கள்: scroll.in , india.com

Do you like the story?

Please Appreciate the Author by clapping!