வெளியிடப்பட்ட நேரம்: 17:00 (04/07/2018)

கடைசி தொடர்பு:17:02 (04/07/2018)

`உச்ச நீதிமன்றத் தீர்ப்பு புதுச்சேரிக்கு 110% பொருந்தும்' - முதல்வர் நாராயணசாமி

``ஆளுநர் அதிகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு புதுச்சேரிக்கு 110% பொருந்தும்” என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

நாராயணசாமி

ஆளுநர் அதிகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கட்சி வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில் கடந்த 2017 டிசம்பர் மாதம் இருதரப்பு வாதங்களும் நிறைவு பெற்றிருந்த நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எம்.கன்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக்பூஷன் ஆகிய 5 பேர் கொண்ட அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பு வழங்கியது. அதில், ``யூனியன் பிரதேசமாக இருந்தாலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்குத்தான் அங்குக் கூடுதல் அதிகாரம் உள்ளது. துணை நிலை ஆளுநர் என்பவர் அமைச்சரவை எடுக்கும் முடிவுகளை ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கும் எந்திரமாக இருக்கக் கூடாது. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு எடுக்கும் முடிவுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். ஆளுநருக்கு என்று தனி அதிகாரம் எதுவும் கிடையாது. அமைச்சரவையில் சிபாரிசுப்படிதான் செயல்பட வேண்டும்” என்று கூறப்பட்டிருக்கிறது.

நாராயணசாமி-கிரண்பேடி

அதைத் தொடர்ந்து புதுச்சேரி சட்டப்பேரவையில் செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் நாராயணசாமி, ``உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு புதுச்சேரி மாநிலத்துக்கு 100-க்கு 110% பொருந்தும். புதுச்சேரிக்கு நான் முதல்வராகப் பதவியேற்றதிலிருந்து துணைநிலை ஆளுநருக்கு என்று தனிப்பட்ட அதிகாரம் கிடையாது என்றும் அதிகார வரம்புகள் தொடர்பாகவும் இதுவரை 19 முறை அவருக்குக் கடிதம் எழுதியிருக்கிறேன். மக்கள் நலத்திட்டங்களை நிறைவேற்றுவதில் துணைநிலை ஆளுநர் முட்டுக்கட்டையாக இருக்கக் கூடாது. அமைச்சரவை எடுக்கும் முடிவை அனுப்ப வேண்டுமே தவிர அதில் கை வைக்கும் அதிகாரம் துணைநிலை ஆளுநருக்கு இல்லை. நான் சொன்ன இவை அனைத்தும் உச்சநீதிமன்றத் தீர்ப்பில் பிரதிபலித்திருக்கிறது.

இது தொடர்பாக கடந்த இரண்டு ஆண்டுகளாக துணைநிலை ஆளுநர், பிரதமர், உள்துறை அமைச்சருக்குக் கடிதம் எழுதியும் எந்தத் தரப்பிலிருந்தும் சரியான பதிலும் நடவடிக்கையும் இல்லாத நிலையில், இது மிகவும் வரவேற்க தகுந்த தீர்ப்பு. அதேபோல துணைநிலை ஆளுநர் அதிகாரிகளை அழைத்து தினமும் கூட்டம் போடுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும். கோப்புகள் தொடர்பாக விளக்கம் வேண்டுமென்றால் செயலரை அழைத்துப் பேச வேண்டும். அப்படி அவர் செல்லும் போது துறை அமைச்சரைச் சந்தித்த பின்தான் செல்ல வேண்டும் என்று அதிகாரிகளுக்கு முன்பே சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது. உச்சநீதிமன்றம் தீர்ப்பை யார் மீறினாலும் அவர்கள்மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நான் தொடருவேன்” என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க