வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (04/07/2018)

கடைசி தொடர்பு:20:00 (04/07/2018)

`கொள்ளையடிப்பவன் தேசத் துரோகியா, அதைத் தடுப்பவன் தேசத் துரோகியா?’ - முத்தரசன் ஆவேசம்

முத்தரசன் ஆர்ப்பாட்டம்

``மலைகளில் உள்ள கனிமங்களைக் கொள்ளையடித்துக் கொண்டு போகிறவர்கள் தேச துரோகியா, இல்லை அதைத் தடுப்பவர்கள் தேசத் துரோகியா’’ என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் ஆவேசத்துடன் கூறினார்.

சேலம் டு சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாகக் கண்டன ஆர்ப்பாட்டம் சேலம் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே நடைபெற்றது. இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்துக்கு மாநிலச் செயலாளர் முத்தரசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர் நஞ்சப்பன், மாநிலக் கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் குணசேகரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேசிய மாநிலச் செயலாளர் முத்தரசன், ''எடப்பாடி பழனிசாமி 8 வழிச் சாலைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. இது மத்திய அரசின் திட்டம்'' என்கிறார். இதைச் சொல்வதால் எடப்பாடி பழனிசாமிக்கு முதல்வர் பதவியில் இருக்கத் தகுதி இல்லை. போராட்டம் செய்பவர்கள் தேசத் துரோகி என்கிறார்கள். மலைகளில் உள்ள கனிமங்களைக் கொள்ளையடித்துக்கொண்டு போகிறவர்கள் தேசத் துரோகியா, இல்லை அதைத் தடுப்பவர்கள் தேசத் துரோகியா என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
 
சேலம் டு சென்னைக்கு 3 சாலைகள் இருக்கின்றன. அந்தச் சாலைகளை மேம்படுத்தினாலே போதும். புதியதாகச் சாலை போடுவதாகச் சொல்லி விளைநிலங்களை விவசாயிகளிடமிருந்து வாங்கவில்லை. அபகரிக்கிறார்கள். இது நியாயம், நேர்மையில்லை. இதை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இச்சாலையால் வேலைவாய்ப்பு பெருகும் என்கிறார்கள். ஆனால், இச்சாலையால் 20,000 பேர் வேலை இழக்கிறார்கள். இந்தச் சாலையால் நீர்நிலைகள், நீர்வழிப் பாதைகள் பாதிக்கப்படுகிறது. நான் பகிரங்கமாகச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் சாலைகள், கட்டடங்கள், தூர்வாறும் பணிகளுக்கு 20 முதல் 40 விழுக்காடு கமிஷன் வாங்குவது நடைமுறையிலிருந்து வருகிறது. 10,000 கோடியில் 40 சதவிகிதம் என்றால் 4,000 கோடி கமிஷனை ஜி.எஸ்.டி வரியில் மாநில அரசு பாதியும் மத்திய அரசு பாதியும் பிரித்துக் கொள்வதுபோல கமிஷனை மாநில அ.தி.மு.க-வும் மத்திய பா.ஜ.க-வும் 2,000 கோடி வீதம் சரி விகிதத்தில் பிரித்துக்கொள்வார்கள். அதற்காகத்தான் இந்த ரோடு போடுவதில் அ.தி.மு.க-வும் பாரதிய ஜனதா கட்சியும் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள்'' என்று கொந்தளித்தார்.