`தமிழக ஆளுநர் உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் புரிந்து செயல்பட வேண்டும்’ - மு.க.ஸ்டாலின்

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் துணை நிலை ஆளுநர் அதிகாரம் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பைப் புரிந்து செயல்பட வேண்டும் எனத் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ஸ்டாலின்

டெல்லியில் ஆளுநருக்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும் இடையே ஏற்பட்ட குழப்பம் காரணமாக யாருக்கு உண்மையான அதிகாரம் உள்ளது எனக் கூறி ஆம் ஆத்மி கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. கடந்த 2016-ம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் அரசியலமைப்புச் சட்டத்தின்படி துணை நிலை ஆளுநர்தான் நிர்வாகத்தின் தலைவர் என 2016 -ம் ஆண்டு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.

இந்தத் தீர்ப்பில், `மத்திய மாநில அரசுகள் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் செயல்பட வேண்டும். மக்கள் பிரதிநிதிகள் மக்களின் கேள்விகளுக்குப் பதில் கூற கடமைப்பட்டவர்கள். டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு முழு அதிகாரமும் உண்டு. தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனையுடன்தான் துணைநிலை ஆளுநர் செயல்பட முடியும். குறிப்பிட்ட துறைகள் தவிர மற்றவற்றுக்கு துணை நிலை ஆளுநரின் ஆலோசனையின்றி மாநில அரசு செயல்படலாம் எனத் தெரிவித்துள்ளது. துணை நிலை ஆளுநர் அமைச்சரவையின் ஆலோசனையுடன்தான் செயல்பட முடியும்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் தி.மு.க செயல்தலைவர் ஸ்டாலின், `மாநில அந்தஸ்தே இல்லாத டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் ஆலோசனைப்படியே ஆளுநர் நடக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருப்பது வரவேற்கத்தக்கது. இதனை முழு அதிகாரம் படைத்த மாநிலங்களில் உள்ள ஆளுநர்களும், குறிப்பாக தமிழக ஆளுநரும் இதை நன்குப் புரிந்துகொண்டு செயல்பட வேண்டும்’ எனப் பதிவிட்டுள்ளார்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!