வெளியிடப்பட்ட நேரம்: 21:00 (04/07/2018)

கடைசி தொடர்பு:21:00 (04/07/2018)

`போராட்டத்தைத் தீவிரப்படுத்துவோம்’ - எச்சரிக்கும் என்.எல்.சி ஒப்பந்தத் தொழிலாளர்கள்

நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் 13,000 ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் உச்ச நீதி
மன்றத் தீர்ப்பின்படி பணி நிரந்தரம், மத்திய அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வு, பஞ்சப்படி உட்பட பல்வேறு கோரிக்கைகளை
வலியுறுத்தி பல ஆண்டுகளாகப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

என்எல்சி ஒப்பந்த தொழிலாளர்கள் போராட்டம்

இதே கோரிக்கையை வலியுறுத்தி என்.எல்.சி சி.ஐ.டி.யு ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம், தொழிலாளர்கள் முன்னேற்ற சங்க ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம், அண்ணா தொழிலாளர்கள், ஊழியர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் உட்பட 13 சங்க கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. நெய்வேலி புதுக்குப்பம் ரவுண்டானாவில் நடந்த உண்ணாவிரதத்துக்கு சி.ஐ.டி.யு ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கத் தொழிற்சங்க நிர்வாகி சக்கரபாணி தலைமை தாங்கினார். ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் பழனிவேல், முருகவேல், ரகுராமன், பாலசுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

என்.எல்.சி நிர்வாகம் உடன் நடவடிக்கை எடுத்து ஒப்பந்தத் தொழிலாளர்களின் கோரிக்கைகளான உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி பணி நிரந்தரம், மத்திய அரசு அறிவித்துள்ள ஊதிய உயர்வு, பஞ்சப்படி உட்பட அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் விரைவில் அனைத்து ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொழிற்சங்க கூட்டமைப்பு கூடி போராட்டத்தை தீவிரப்படுத்துவது குறித்து முடிவு செய்யப்படும் எனத் தொழிற்சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.