தனியார் பள்ளிகள் நீட் பயிற்சியைக் கட்டாயப்படுத்தக் கூடாது - மெட்ரிக் இயக்குநரகம் அதிரடி!

தனியார் பள்ளிகளில் வணிக நோக்கமுள்ள நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது என மெட்ரிக் பள்ளி இயக்குநரகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நீட்

பல்வேறு எதிர்ப்புகளைத் தாண்டி நீட் தேர்வின் அடிப்படையில் இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. பல்வேறு இடங்களில் தனியார் நிறுவனங்கள் மூலம் நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. அரசு தரப்பிலும் நீட் பயிற்சி மாணவர்களுக்கு வழங்கப்பட்டது. 11, 12 வது மாணவர்களுக்கு ஒருங்கிணைந்த நீட் தேர்வுக்கான பயிற்சிகள் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நடைமுறை கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. இந்தப் பயிற்சிகள் பள்ளியில் இருக்கும் ஆசிரியர்கள் அல்லாமல் வெளியில் செயல்பட்டு வரும் தனியார் நீட் பயிற்சி நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் மூலம் ஏராளமாகப் பணம் கட்டணமாக வசூலிக்கப்படுவதாகக் கூறப்படுகிறது.

நீட் பயிற்சி மையம் மூலமாக 2 லட்சம் முதல் 5 லட்சம் வரை கட்டணம் வசூலிக்கப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு முடிவுகட்டும் விதமாக மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், ``மெட்ரிக் பள்ளிகளில் தனியார் நிறுவனங்கள் மூலம் நீட் பயிற்சி அளிப்பது வணிகமயமாக்கக்கூடிய சூழலை உருவாக்கும். இப்படியான பயிற்சியில் மாணவர்களைச் சேர கட்டாயப்படுத்தக் கூடாது. அப்படிச் செய்தால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். பள்ளிகளுக்கு உள்ளே நீட் தேர்வுப் பயிற்சி மையங்களை அனுமதிக்கக் கூடாது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அப்படி விதிமீறி செயல்படும் பள்ளிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கண்காணித்து, அறிக்கையை அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.


 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!