கடலில் செல்லும் படகுக்கும் சாலை வரி; மானிய டீசல் தாமதத்தால் தவிக்கும் மீனவர்கள்!

 கடலை நம்பி மீன்ப்பிடிக்க செல்லும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு கொடுத்து வரும் தொல்லைகள் போதாது என்று இங்கிருக்கும் அரசுகளும் அவ்வப்போது தொல்லை கொடுத்து வருகின்றன. இப்போதைய தொல்லை மானிய விலையிலான டீசல் உரிய காலத்தில் வழங்காததால் ஏற்பட்டிருக்கிறது.

கடலில் செல்லும் படகுக்கும் சாலை வரி; மானிய டீசல் தாமதத்தால் தவிக்கும் மீனவர்கள்!

டலை நம்பி மீன்பிடிக்கச் செல்லும் தமிழக மீனவர்களுக்கு இலங்கை அரசு கொடுத்துவரும் தொல்லைகள் போதாது என்று இங்கிருக்கும் அரசுகளும் அவ்வப்போது தொல்லை கொடுத்து வருகின்றன. இப்போதைய தொல்லை, மானிய விலையிலான டீசல் உரிய காலத்தில் வழங்கப்படாததால் ஏற்பட்டிருக்கிறது.

தமிழகத்தின் நீண்ட கடற்பரப்பைக் கொண்டிருப்பது ராமநாதபுரம் மாவட்டம். இதனால் பெரும் பகுதியான மக்கள் கரையோர மீன்பிடிப்பையும் விசைப்படகு மீன்பிடிப்பையும் நம்பி வாழ்க்கை நடத்திவருகின்றனர். கரையோர கடல்பரப்பு நீண்டிருந்தாலும் கடலுக்கு நடுவே செல்லக்கூடிய தூரம் மிகவும் குறைந்த அளவே உள்ளது. அதிலும் பாதிக்கும் மேற்பட்ட பகுதி பாறைகளுக்கிடையே அமைந்துள்ளது. இதனால் உயிரே பறிபோகும் சூழலிலும் அவர்கள் மீன்பிடிக்க எல்லை தாண்டி செல்வதைத் தவிர வேறு வழியில்லை. அப்படியே உயிரைப் பணயம் வைத்து மீன்பிடித்து வந்தாலும் அந்த மீனுக்கு உரிய விலை கிடைப்பதில்லை. இதனால் படகு உரிமையாளர்களாக இருந்த ஏராளமான மீனவர்கள், இன்று பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பஞ்சம் பிழைப்பவர்களாக மாறிவிட்டனர். இதற்கும் வழியில்லாத பலர் கடலையும், அதிலிருக்கும் மீன்களையும் நம்பி கண்ணீரோடு தங்கள் வாழ்க்கைப் படகை ஓட்டி வருகின்றனர்.

மானிய டீசல் தாமதத்தினால் கரையில் நிறுத்தப்பட்டுள்ள படகுகள்

மழை, வெயில், பனி, இருட்டு உள்ளிட்ட இயற்கை இடர்ப்பாடுகளுடன் செயற்கையாக நிகழும் இலங்கை கடற்படையினரின் இன்னல்களையும் தாங்கிக்கொண்டு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள், தங்கள் வாழ்வாதாரத்தை மட்டுமல்ல... நாட்டின் வாழ்வாதாரத்தை உயர்த்தவும் உதவி செய்து வருகின்றனர். அவ்வாறு அரசுக்கு உதவும் மீனவர்களுக்கு அந்த அரசுகளால் ஏற்படும் இடையூறுகள் சொல்லிமாள முடியாதவையாகும்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய அனைத்து விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் என்.தேவதாஸ் ''பல்வேறு பிரச்னைகளுக்கு மத்தியில் வாழ வேறு வழியில்லாததால் கடல் தொழிலை மட்டுமே நம்பியிருப்பவர்கள் மீனவர்கள். குறுகிய கடல்பரப்பில், முழுமையான மீன்பிடிப்பில் ஈடுபட முடியாததால் ஆண்டுக்கு 70 முதல் 80 நாள்களே மீன் பிடிக்கச் செல்கிறோம். அப்படிச் செல்வதிலும் பல்வேறு இழப்புகளைச் சந்திக்க வேண்டியுள்ளது. இந்த இழப்பிலிருந்து ஓரளவு மீண்டுவர உதவியாக இருப்பது அரசால் வழங்கப்படும் மானிய விலையிலான டீசல். அதை, குறித்த நேரத்தில் வழங்காததால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மீன்பிடித் தொழிலை நம்பியுள்ள சுமார் 20,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டது மட்டுமல்லாது, ஒவ்வொரு நாளும் 2 கோடி ரூபாய் அளவுக்கு வர்த்தகம் பாதிப்படைந்துள்ளது. இதன்மூலம் நாட்டுக்கு நாங்கள் ஈட்டித்தரும் அந்நியச் செலாவணி வருவாயும் பாதிக்கப்பட்டுள்ளது. 

டீசல் மானியம் குறித்து விவரிக்கும் தேவதாஸ்-சேசுராஜ்

டீசல் விலை தொடர்ச்சியாக ஏறிவந்த நிலையில், மீனவர்கள் வாழ்வாதாரத்தை இழக்கும் சூழல் ஏற்பட்டது. இதைத் தவிர்க்க முதல்வர் ஜெயலலிதா மீனவர்களுக்கு மானிய விலையிலான டீசல் திட்டத்தைக் கொண்டுவந்தார். இதன்படி, ஒவ்வொரு மாதமும் 1,800 லிட்டர் டீசல் மானிய விலையில் அரசால் வழங்கப்பட்டு வருகிறது. ஓர் ஆண்டில் மீன்பிடித் தடைக்காலம் போக எஞ்சிய 10 மாதங்களுக்கு இது வழங்கப்படுகிறது. இந்த டீசலை ஒவ்வொரு மாதமும் 1 முதல் 30 தேதிக்குள் பெற வேண்டும். 31-ம் தேதி கணக்கில் வராது. இன்றைய தேதியில் வெளியில் 73 ரூபாய்க்கு விற்கப்படும் டீசல், எங்களுக்கு 58.99 ரூபாய்க்கு வழங்கப்படுகிறது. இதனால் ஓரளவு சிரமமின்றி மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்தோம். இந்நிலையில், இந்த மாதத்துக்கான மானிய டீசல் ஒதுக்கீட்டில் அதிகாரிகள் கையெழுத்திட தாமதமாகியுள்ளது. இதனால் மானிய டீசலை நம்பியுள்ள சுமார் 600-க்கும் மேற்பட்ட படகுகள் மீன்பிடிக்கச் செல்ல முடியாத நிலை உருவானது. இங்கு மானிய விலை டீசல் விநியோகம் செய்ய 3 பங்க்குகள் உள்ளன. இதில் ஒரு பங்க்கில் மட்டுமே டீசல் விநியோகிக்கப்படுகிறது. அதனால் ஒருசில மீனவர்கள் மட்டும் கடலுக்குச் செல்லும் நிலை உருவானது. இதனால் ஏற்படும் தேவையற்ற குழப்பங்களைத் தவிர்க்க வழங்கப்படும் மானிய டீசலை எங்களுக்குள் சரிசமமாகப் பிரித்துக்கொண்டு கடலுக்குச் செல்ல உள்ளோம்'' என்றார்.

தமிழ்நாடு விசைப்படகு மீனவர்கள் சங்க மாவட்டத் தலைவர் சேசுராஜ், ``ஒருநாள் ஒரு படகு கடலுக்குச் சென்று திரும்ப 300 முதல் 500 லிட்டர் டீசல் செலவாகிறது. ஒரு மாதத்தில் 10 நாள்கள் மீன்பிடிக்கச் செல்லும் நிலையில் 3,000 முதல் 5,000 லிட்டர் டீசல் தேவையுள்ளது. இதில் 1,800  லிட்டர் டீசல் மானிய விலையில் கொடுக்கப்படுகிறது. ஒருநாள் கடலுக்குச் சென்று வர டீசல், சம்பளம், மீன்பிடிச் சாதனங்கள், சாப்பாடு, ஐஸ்கட்டி என 65,000 ரூபாய் வரை செலவாகிறது. ஆனால், நாங்கள் பிடித்துவரும் மீன்களோ அதிகபட்சமாக 60,000 ரூபாய்க்குத்தான் விற்பனையாகிறது. எங்களுக்கு வழங்கப்படும் டீசல் மானியத்தின் மூலம் நஷ்டமாகும் தொகையை ஈடுகட்டி வருகிறோம். லாபம் ஏதும் இல்லாத நிலையில், மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் சுமார் 20,000 பேரும் வேலைவாய்ப்புக்காகவே இத்தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறோம். 

ராமேஸ்வரத்தில் உள்ள டீசல் பல்க்

இந்நிலையில் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வரும் டீசல் விலை, ஜி.எஸ்.டி மற்ற பொருள்களின் விலை உயர்வு, லாரி வாடகை போன்றவற்றைக் காரணம் காட்டி மீன் கொள்முதல் விலையை வியாபாரிகள் குறைத்துவிட்டனர். பக்கத்து நாடான இலங்கையில்கூட டீசல் விலை நம்மைவிடக் குறைவு. ஆனால், இங்குதான் ஒவ்வொரு நாள் டீசல் விலை ஏற்றத்தின்போதும் அதற்கான வரியும் உயர்ந்து வருகிறது. இதைவிடக் கொடுமை என்னவென்றால், சாலையில் ஓடும் வாகனங்களுக்குச் சாலை வரி டீசல் கட்டணத்துடன் வசூலிக்கப்படுவதில் நியாயம் உள்ளது. ஆனால், கடலில் ஓடும் படகுகளுக்கும் சாலை வரி வசூலிப்பது என்ன நியாம் எனத் தெரியவில்லை. எல்லை தாண்டிச் சென்று மீன்பிடிக்கவும் வழியில்லை. அதிகரித்துவரும் செலவை ஈடுகட்டவும் முடியவில்லை. இதனால் பல மீனவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகும்  நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இந்த நிலையைத் தடுக்க, ஆழ்கடல் மீன்பிடிப்புக்கு மீனவர்கள் மாறும் வரையிலாவது டீசல் மானியத்தை உயர்த்தி வழங்க அரசு முன்வர வேண்டும். அதையும் உரிய காலத்துக்குள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

காலம் காலமாய் நீடித்துவந்த காவிரிப் பிரச்னையில்கூடத் தமிழக விவசாயிகளுக்கு ஓரளவு தீர்வு காணப்பட்டிருக்கிறது. ஆனால், கடலை மட்டுமே நம்பியுள்ள மீனவர்களுக்கு எப்போது நிரந்தரத் தீர்வு கிட்டுமோ என்பது கேள்விக்குறியாகவே நிற்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!