வெளியிடப்பட்ட நேரம்: 19:20 (04/07/2018)

கடைசி தொடர்பு:19:20 (04/07/2018)

`சட்டசபையில் லோக் ஆயுக்தா! - என்ன சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்?

தமிழக சட்டமன்றத்தில் லோக் ஆயுக்தா மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், அந்த அமைப்பு எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்து சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

லோக் ஆயுக்தா

உச்ச நீதிமன்றத்தின் வலியுறுத்தலின்படி தமிழகத்தில் லோக் ஆயுக்தா சட்டம் அமலுக்கு வர உள்ளது. இன்னும் ஓரிரு நாள்களில் சட்டமன்றத்தில் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், லோக் ஆயுக்தா குறித்து தொடர்ந்து பேசி வரும் அறப்போர் இயக்கத்தினரைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அதன் நிர்வாகி ஜெயராமன், `லோக் ஆயுக்தா என்பது தன்னிச்சையான விசாரணை அமைப்பு. தன்னிச்சையான விசாரணை அமைப்பா அதைத் தமிழக அரசு அமைக்கணும். 3 விதமான தன்னிச்சைத் தன்மை அதற்குத் தேவை. நிதி; செயல்பாடு; நியமனம் ஆகியவற்றில் தன்னிச்சை தன்மை தேவை. நியமனக்குழு ஆளுங்கட்சி சார்ந்ததாக இருக்கக் கூடாது. பரவலானவர்கள் அதில் இடம்பெற வேண்டும். அப்படியிருந்தால் மட்டுமே நேர்மையானவர்கள் நியமிக்க வாய்ப்புள்ளது. சட்ட மசோதாவை மக்கள் பார்வைக்கு வைத்த பின்னர், அதை நிறைவேற்றுங்கள் எனப் பலமுறை கூறியுள்ளோம். இது தொடர்பாகத் தலைமைச் செயலாளரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். ஆனால், அவர்கள் அதைக் கேட்கவில்லை. காரணம் இவர்களுக்கு லோக் ஆயுக்தா கொண்டு வர வேண்டும் என்ற எண்ணமில்லை. உச்ச நீதிமன்றத்தின் வற்புறுத்தல் காரணமாகவே வேறு வழியின்றி சட்டத்தை நிறைவேற்ற உள்ளனர். சட்டப்பேரவையில் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டு விவாதங்கள் நடத்தப்பட வேண்டும்.

அறப்போர்விவாதங்களுக்குப் பின் அமல்படுத்தப்பட வேண்டும். லஞ்ச ஒழிப்புத்துறை மாதிரி ஊழல் செய்யக்கூடியவர் இருப்பதுபோல லோக் ஆயுக்தாவில் அமையக் கூடாது. அதேபோல லஞ்ச ஒழிப்புத்துறையில் இருக்கும் நேர்மையான அதிகாரியை இடமாற்றம் செய்வதைப்போல லோக் ஆயுக்தாவில் செய்ய முடியாது. லோக் ஆயுக்தா அமைப்பதில் மாநிலத்துக்கு சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. இதன்காரணமாக மாநில அரசு தங்களுக்கு ஏற்ற மாதிரி சட்டத்தைக் கொண்டு வரும் அபாயம் உள்ளது. இதனால் பல் இல்லாத மசோதாவை கொண்டு வர வாய்ப்புள்ளது. ஆட்சியாளர்கள் தங்கள் சொத்து விவரங்கள் வைக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை. அரசு அதிகாரிகள் உள்ளிட்டவர்கள் அரசுமீது ஊழல் குற்றச்சாட்டு வைத்தால், அதில் முகாந்திரம் இருந்தால் லோக் ஆயுக்தா அமைப்பு தன்னிச்சையாக முன்வந்து அந்தக் குறிப்பிட்ட நபர்மீது விசாரணை நடத்த வேண்டும். இதுதான் முக்கியம். லோக் ஆயுக்தாவின் தலைவர் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதியாக அல்லது ஓய்வு பெற்ற உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும். நியமன குழுவில் முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர், தற்போது பணியில் உள்ள உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி, மேலும் இரண்டு நீதிபதிகள் என ஐந்து பேர் கொண்ட அமைப்பாக இருக்க வேண்டும். இதன்மூலம் நேர்மையானவர் வர வாய்ப்புள்ளது. லோக் ஆயுக்தா தொடர்பாக மூன்று வருடமாகப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறோம். அதற்கான மாதிரி சட்ட மசோதாவை நாங்கள் உருவாக்கியுள்ளோம். நியமனக் குழுவில் ஆளுங்கட்சியைச் சார்ந்தவர்களே இருந்தால், அது தற்போதுள்ள லஞ்ச ஒழிப்புத்துறை போலவே மாறிவிடும். ஆளுங்கட்சியினரின் ஊழலை வெளிக்கொண்டு வர முடியாது. மகாராஷ்ட்ரா, உத்தரகாண்ட், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் பெயரளவில் உள்ளதுபோல தமிழகத்திலும் லோக் ஆயுக்தா இருந்துவிடக் கூடாது. கேரளா, கர்நாடகா சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலும் அதேபோல வலிமையான லோக் ஆயுக்தா அமைக்க வேண்டும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பு’ என்று கூறி முடித்தார் அவர். 

இது தொடர்பாக அமைச்சர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டோம். அப்போது அவர் `லோக் ஆயுக்தா சட்ட மசோதா விரைவில் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும். லோக் ஆயுக்தா குறித்து தற்போது ஏதும் கூற முடியாது’ என்று தெரிவித்தார்.