வெளியிடப்பட்ட நேரம்: 22:00 (04/07/2018)

கடைசி தொடர்பு:22:00 (04/07/2018)

கும்பகோணம் அரசு மருத்துவமனையில் தீ விபத்து..! ஆவணங்களை அழிக்க சதியா?

கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலானது.கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற மகாமகத்தின் போது பல்வேறு பணிகளுக்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது அரசு. இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதாகக் கூறி சுகாதாரத்துறை இயக்குநரகத்தின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த நிலையில் தீ விபத்து எற்பட்டதால் ஆவணங்களை அழிப்பதற்காகவே சம்பந்தப்பட்டவர்கள் இப்படி செய்துவிட்டார்கள் எனத் தகவல் பரவ அதன் அடிப்படையிலேயே போலீஸாரும் விசாரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கும்பகோணம் அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் பல முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. கடந்த 2016-ம் ஆண்டு  நடைபெற்ற மகாமகத்தின்போது பல்வேறு பணிகளுக்காக 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது அரசு. இதில் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பிருப்பதாக கூறி சுகாதாரதுறை இயக்குனரகத்தின் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் தீ விபத்து எற்பட்டதால் ஆவணங்களை அழிப்பதற்காகவே சம்பந்தபட்டவர்கள் இப்படி செய்துவிட்டார்கள் என தகவல் பரவ அதன் அடிப்படையிலேயே போலீசாரும் விசாரித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தின் அரசு தலைமை மருத்துவமனையாகக் கும்பகோணம் மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவனையில் விபத்து அவசர சிகிச்சைப் பிரிவு, எலும்பு முறிவு, குழந்தைகள், பெண்கள் நலப்பிரிவு, தீப்புண் கிசிச்சை உள்ளிட்ட 21 வகையான பிரிவுகளில் நோய்களுக்குக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த வளாகத்தில் உள்ளேயே மருத்துவக் கண்காணிப்பாளர் அலுவலகம் இருக்கிறது. மேலும், அந்த அலுவலகத்தின் ஓர் அறையில்தான் காசாளர் அறையும் உள்ளது. இதில் மருத்துவர்களின் பணி பதிவேடுகள், சிகிச்சைக்கான மருந்துகள் கொள்முதல், மாநில அரசு கொடுத்த நிதிகள் மற்றும் அவற்றைச் செலவு செய்ததற்கான ரசீதுகள், காசோலைகள், பணியாளர்களின் சம்பள விவரங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய ஆவணங்களும் இங்குதான் பாதுகாக்கப்பட்டு வந்தன. 

இந்நிலையில் நேற்று இரவு கண்காணிப்பாளர் அலுவலக அறையிலிருந்து கடும் புகை வெளியேறியது. இதையடுத்து மருத்துவ மனையில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் அளித்தனர். உடனடியாகத் தீயணைப்பு வீரர்கள் வந்ததோடு விரைந்து தீயை அணைத்தனர். ஆனாலும், தீ விபத்தில் காசாளர் அறை, கண்காணிப்பாளர் அறைகளிலிருந்து முக்கிய ஆவணங்கள் எரிந்து சாம்பலானது. தீ விபத்து குறித்து மருத்துவமனை வட்டாரங்களில் விசாரித்தபோது, கும்பகோணத்தில் கடந்த 2016-ம் ஆண்டு தென்னகத்து கும்பமேளா என்றழைக்கப்படுகிற மகாமகத் திருவிழா நடைபெற்றது. இதற்காக, பல்வேறு சுகாதாரப் பணிகளுக்காகக் கும்பகோணம் மருத்துவமனைக்கு தமிழக அரசு ரூ.2 கோடி நிதி ஒதுக்கியது.  

இதில் எவ்வளவு பணம், எந்தெந்தப் பணிக்காகச் செலவிடப்பட்டது போன்ற ஆவணங்கள் காசாளர் அறையில் இருந்தது. கடந்த வாரம் மாநிலச் சுகாதார இயக்குநரகத்தின் தணிக்கையாளர்கள் மருத்துவமனையில் தணிக்கை செய்தபோது, இந்த நிதி கையாளப்பட்டதில் முறைகேடு ஏற்பட்டுள்ளதாகவும் அதற்காக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர், மருத்துவமனை கண்காணிப்பாளர், அலுவலக கண்காணிப்பாளர், முதன்மை மருந்தாளுநர் ஆகிய நால்வருக்கும் விளக்கம் கேட்டு 17 பி மெமோ வழங்கப்பட்டது. மேலும், தமிழக அரசு வழங்கிய நிதிகள் எந்த வகையில் செலவிடப்பட்டுள்ளது என்பது தொடர்பாக வரும் வாரத்தில் தமிழக அரசின் மாநிலத் தணிக்கை குழுவினர் ஆய்வு செய்வதாகவும் இருந்தது.

அதற்குள் இந்தத் தீ விபத்து நடந்துள்ளது. தீ விபத்துக்கு முதலில் மின்கசிவுதான் காரணம் எனக் கூறப்பட்டது. ஆனால், மகாமகத்தின்போது ஒதுக்கபட்ட நிதியில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதிலிருந்து தப்பித்துக்கொள்ளவே சம்பந்தப்பட்டவர்கள் உள்நோக்கத்துடன் இதுபோன்று செய்திருக்க வாய்ப்பிருப்பதாகத் தெரிகிறது' என்றனர்.

இந்தத் தீ விபத்து குறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளதோடு தீ விபத்து தற்செயலாக ஏற்பட்டதா இல்லை ஆவணங்களை அழிப்பதற்காக நடந்த சதியா என்கிற கோணத்தில் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் கும்பகோணம் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க