வெளியிடப்பட்ட நேரம்: 22:15 (04/07/2018)

கடைசி தொடர்பு:22:15 (04/07/2018)

திருமணமான ஒரே மாதத்தில் இறந்த மகன்..! 10 நாள்களாகியும் உடலை மீட்க முடியாமல் தவிக்கும் தாய்

குவைத் நாட்டுக்கு டிரைவர் பணிக்குச் சென்ற என் மகன் இறந்து ஒரு மாதம் ஆகவுள்ள நிலையில் அவன் உடல் இன்னும் சொந்த ஊருக்கு கொண்டுவரப்படவில்லை. இறந்த என் மகனின் உடலை மீட்டுக் கொடுங்கள். என் நிலைமை எந்தத் தாய்க்கும் வரக்கூடாது என தாய் ஒருவர் தஞ்சாவூர் ஆட்சியர் அண்ணாதுரையிடம் கலங்கியபடி மனு கொடுத்த சம்பவம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

கும்பகோணம் அருகே நாலுார் இஞ்சிக்கொல்லைப் பகுதியைச் சேர்ந்தவர் இந்திராணி. இவரின் மகன் ராஜாராம். இவர் குவைத் நாட்டில் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக டிரைவராகப் பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் ஊருக்கு வந்த ராஜாராமுக்குத்  திருமணம் நடந்தது. அதன் பின்னர் இரண்டு மாதம் கழித்து மீண்டும் கடந்த மே 25-ம் தேதி வேலைக்காகச் குவைத்துக்குச் சென்றுவிட்டார். அதற்கும் அடுத்த வாரம், அதாவது கடந்த ஜூன் 8-ம் தேதி ராஜாராம் இறந்தவிட்டதாக அவரின் நண்பர்கள், போன் மூலம் தாய் இந்திராணியிடம் தகவல் தெரிவித்துள்ளனர். இதை அறிந்த இந்திராணி மற்றும் அவர் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்து கதறி அழுதனர்.

இதையடுத்து, ராஜாராம் உடலை ஊருக்குக் கொண்டு வர வேண்டி அவரைக் குவைத்துக்கு வேலைக்கு அனுப்பிய ஏஜென்டை, இந்திராணி போனில் தொடர்புகொண்டு கேட்டுள்ளார். அவரும்  உடலை விரைவில் கொண்டு வர அனைத்து முயற்சிகளையும் எடுப்பதாகத் தெரிவித்துள்ளார். ஆனால், ஒரு மாதமாகியும் இதுவரை ராஜாராம் உடல் வரவில்லை. இதனால் என் மகன் உடலைச் சொந்த ஊருக்குக் கொண்டு வருவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆட்சியர் அலுவலகத்துக்கு தன் உறவினர்களுடன் வந்த இந்திராணி, ஆட்சியர் அண்ணாதுரையிடம் கலங்கியபடி மனு கொடுத்தார். 

இதுகுறித்து இந்திராணியிடம் பேசினோம், 'என் மகன் ராஜாராம் குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காகப் பிழைப்பு தேடி குவைத்துக்குச் சென்றான். ஒரு வருடம் கழித்து வந்தவனுக்குத் திருமணம் செய்து வைத்தேன். திருமணம் முடிந்து இரண்டு மாதம் கழித்து மீண்டும் குவைத்துக்குச் சென்றான். அடுத்த வாரத்திலேயே அவன் இறந்துவிட்டான் எனத் தகவல் வர எங்க குடும்பமே ஆடிப்போய்விட்டது. இறந்துவிட்டான் எனத் தெரிந்தும் ஒரு மாதம் ஆகியும் அவன் உடல் முகத்தைக் காணாமல் ஒரு தாயாக நான் தவிக்கும் தவிப்பு வேறு எந்தத் தாய்க்கும் வரக்கூடாது. அவன் உடலை மீட்டுக் கொடுங்கள் என ஆட்சியரிடம் மனு கொடுத்தேன். அவர் கலங்காதீங்க, உடலை மீட்டு வருவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறேன்' என்று தெரிவித்தார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க