பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபர்... 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிமன்றம் | The young man who trying to rape a girl get 21 years imprisonment punishment

வெளியிடப்பட்ட நேரம்: 23:20 (04/07/2018)

கடைசி தொடர்பு:23:20 (04/07/2018)

பெண்ணை மானபங்கம் செய்ய முயன்ற வாலிபர்... 21 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கிய நீதிமன்றம்

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஓடைக்கால் கிராமத்தில் பெண்ணை மானபங்கம் செய்து தாக்கியது தொடர்பான வழக்கில் சம்பந்தப்பட்ட இளைஞருக்கு மகளிர் நீதிமன்றம் இருபத்தி ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளித்தது.

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை தாலுகா ஆர்.எஸ்.மங்கலம் அருகேயுள்ள ஓடைக்கால் கிராமத்தில் வசித்து வந்த சாமிநாதன் மகள் இருதயமேரி. திருமணமாகாத இவர் வீட்டில் தனியாக இருந்தபோது அதே கிராமத்தைச் சேர்ந்த காத்தமுத்து மகன் வடிவேல் முருகன் (33) என்பவர் இருதய மேரியைப் பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றுள்ளார். அதைத் தடுத்த இருதயமேரியை வடிவேல் முருகன் தாக்கியதில் பலத்த காயம் அடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 2013 ஜனவரி 1-ம் தேதி இருதய மேரி வீட்டில் நடந்த இந்தச் சம்பவம் தொடர்பாக அவர் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.எஸ்.மங்கலம் போலீஸார் வழக்கு பதிவு செய்து வடிவேல் முருகனை கைது செய்திருந்தனர்.

இது தொடர்பான வழக்கு ராமநாதபுரம் மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞர் மனோரஞ்சிதம் ஆஜரானார். வழக்கை விசாரித்த மகளிர் நீதிமன்ற மாவட்ட முதன்மை நீதிபதி ஏ.கயல்விழி, பெண்ணை மானபங்கம் செய்ய முயன்று தாக்கிய குற்றத்துக்காக வடிவேல் முருகனுக்கு இருபத்தி ஒன்றரை ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.46,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். 

அபராதத் தொகையைச் செலுத்த தவறினால் மேலும் ஓர் ஆண்டு சிறைத்தண்டனையை அனுபவிக்க வேண்டும் எனவும் அபராதத் தொகையில் ரூ.45,000-த்தைப் பாதிக்கப்பட்ட பெண் இருதய மேரியிடம் வழங்கிடவும், மீதத் தொகை ரூ.1,000-த்தை அரசுக்கு செலுத்திவிட வேண்டும் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.