வெளியிடப்பட்ட நேரம்: 01:07 (05/07/2018)

கடைசி தொடர்பு:01:07 (05/07/2018)

ஶ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் பங்கு விலை 18% குறைய என்ன காரணம்?  

ஶ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் (STFC) நிறுவனத்தின் பங்கு விலை இன்று அதிகபட்சமாக 18% வரை குறைந்தது. இந்தப் பங்கின் விலை திடீரென குறைய என்ன காரணம் என்பதைப் பார்ப்பதற்குமுன், இந்த நிறுவனம் பற்றிய சில அடிப்படைத் தகவல்களைப் பார்ப்போம். 

சென்னையைச் சேர்ந்த ஶ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனம் கடந்த 1979-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. நாட்டின் மிகப் பெரிய வர்த்தகப் பயன்பாட்டு நிறுவனமான இந்த நிறுவனம் புதிய மற்றும் பழைய கன ரக வாகனங்களுக்குக் கடன் வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு நாடு முழுவதும் 1,121 கிளை அலுவலங்கள் இருக்கின்றன. மேலும், கிராமப்புறங்களில் 930 மையங்கள் உள்ளன. வங்கி சாராத நிறுவனமான இது ரிசர்வ் வங்கி அனுமதி பெற்றது என்பதுடன், அதிகளவில் சொத்துகளை கொண்ட மிகப் பெரிய நிறுவனமாகவும் உள்ளது. 

பங்கு விலை

பங்குச்சந்தையில் சிறப்பாக செயல்பட்டுவரும் இந்த நிறுவனம், பொதுமக்களுக்குக் கடன் பத்திரங்களை வெளியீட்டு ரூ.5,000 கோடி திரட்ட உள்ளதாகத் தெரிவித்திருந்தது. இந்த நிலையில், ஶ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகளின் விலை இன்று 18% வரை குறைந்தது. ரூ.1225-ல் வர்த்தகமாகத் தொடங்கிய இந்தப் பங்கு விலை ரூ.1047 வரை குறைந்தது கண்டு முதலீட்டாளர்கள் ஆச்சரியம் அடைந்தனர். இந்தப் பங்கின் விலை ஏன் திடீரெனக் குறைந்தது என பங்குச்சந்தை நிபுணர் ரெஜி தாமஸிடம் கேட்டோம். அவர் கூறியதாவது, 

'ஶ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனம், எஸ்.வி.எல் என்ற துணை நிறுவனம் வெளியிட்டுள்ள ரூ. 870 கோடி மதிப்பு கொண்ட, மாற்ற முடியாத கடன் பத்திரங்களுக்கு (NCD) பேங்க் கேரண்டி அளித்துள்ளதாக அதன் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது அந்த நிறுவனத்தின் நிதிநிலைக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் என முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு பயம் உருவானது. மேலும், இந்த நிறுவனத்தின் அறிக்கை காரணமாக, ஜெஃப்ரி என்ற சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனம், ஶ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ்  நிறுவனத்தின் மதிப்பீட்டைச் சற்றுக் குறைத்துள்ளது. 

மேற்கண்ட இரண்டு செய்திகள் வெளியானதும், என்.எஸ்.இ. மற்றும் பி.எஸ்.இ பங்குச்சந்தைகளில் இந்தப் பங்கின் விலை சரியத் தொடங்கியது. இனியும் இந்த நிறுவனப் பங்குகளை தொடர்ந்து வைத்திருந்தால் பலன் இல்லை என்று கருதி முதலீட்டாளர்கள் இந்த நிறுவனத்தின் பங்குகளை வேகமாக விற்கத் தொடங்கினர். லாப நோக்கம் கருதி பங்குகளை விற்க தொடங்கியதால்,  ஶ்ரீராம் ட்ரான்ஸ்போர்ட் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் பங்குகள் விலை குறைந்துள்ளது.

இந்தச் செய்தி வெளியானவுடன் இந்த நிறுவனத்தின் முதன்மை செயல்பாட்டு அதிகாரியான உமேஷ் ரவங்கர் பேட்டி அளித்தார். ''எஸ்.வி.எல் நிறுவனம் வாங்கிய கடனைத் திரும்பக் கட்டிவிடும். இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளை எங்கள் இயக்குநர் குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. இந்தப் பிரச்னை குறித்து சுமுகமான முடிவு எடுக்கப்படும். இந்த மாற்ற முடியாத கடன் பத்திரங்கள்(NCD) வரும் 2019-ம் ஆண்டுதான் முதிர்ச்சியடைகின்றன. எனவே, துணை நிறுவனத்துக்கு பேங்க் கேரண்டி வழங்கியிருப்பது குறித்து முதலீட்டாளர்கள் கவலைப்படத் தேவையில்லை'' என்று உமேஷ் ரவங்கர் சொல்லியிருக்கிறார். 

அவரது பேட்டி வந்தபிறகு இந்தப் பங்கின் விலை சரிவிலிருந்து மீளத் தொடங்கியது. இன்றைய வர்த்தக முடிவின்போது இந்தப் பங்கின் விலை ரூ.1144-ஆக முடிந்தது'' என்று விளக்கம் தந்தார் ரெஜி தாமஸ்.

இந்தப் பங்கின் ஏற்பட்ட இறக்கம் நாளையும் தொடருமா என்பதை இந்தப் பங்கில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள் மிகக் கவனமாக கண்காணிக்க வேண்டியது அவசியம்.