வெளியிடப்பட்ட நேரம்: 01:19 (05/07/2018)

கடைசி தொடர்பு:01:19 (05/07/2018)

தொடரும் நில அளவைப் பணி..! தற்கொலை செய்ய கிணற்றில் குதித்த விவசாயிகள்

சேலம் டு சென்னை 8 வழிச்சாலையை எதிர்த்து சேலம் மாவட்டம் பாரப்பட்டி பூமாங்காடு பகுதியைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன், மாணிக்கம் தற்கொலை செய்துகொள்ள கிணற்றில் குதித்தார்கள். அதையடுத்து ஊர் பொதுமக்களும் போலீஸாரும் உடனே கிணற்றில் குதித்து அவர்களை மீட்டனர். இதனால் இப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் நடந்துகொண்டிருக்கும்போது மனிதாபிமானவே இல்லாமல் வருவாய்த்துறை அதிகாரிகள் நில அளவை தொடர்ந்து அளவீடு செய்துகொண்டிருந்தார்கள்.

இதுபற்றி கிணற்றிலிருந்து மீட்கப்பட்டமுத்துக்கிருஷ்ணன், ''எனக்கு அப்பா இல்லை. அம்மா மட்டும் இருக்காங்க. என்கூட பிறந்தவர்கள் 3 சகோதரிகள். நான் பி.காம் முடித்திருக்கிறேன். எனக்கு வயது 20 இருக்கும்போது விபத்து ஏற்பட்டு தலையில் அடிபட்டி 70 நாள்கள் சுய நினைவு இல்லாமல் இருந்தேன். அதன் பிறகு, தனியார் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் ஆப்ரேட்டராகச் சேர்ந்து என் விபத்துக்கு வாங்கிய கடன்களை அடைத்துவிட்டு 3 சகோதரிகளுக்கும் திருமணம் செய்து வைத்துவிட்டு தற்போது நானும் என் அம்மாவும் வாழ்ந்துகிட்டு இருக்கிறோம்.

எங்களுக்கு 60 சென்ட் நிலம் இருக்கு. அதில் அரளிப் பூவும், குச்சி கிழங்கும் பயிரிட்டிருக்கிறோம். அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து வாழ்ந்துகிட்டு இருக்கிறோம். தற்போது 8 வழிச்சாலை போடுவதாக எங்க நிலங்களையெல்லாம் அபகரிக்கிறார்கள். 8 வழிச்சாலை வருவது எங்கள் பகுதி மக்களுக்கு சிறிதும் விருப்பமில்லை.

இங்கு இருப்பவர்கள் எல்லோரும் விவசாயத்தையும் தறியையும் நம்பி வாழ்ந்துகிட்டு இருக்கிறோம். இது சம்பந்தமாக நில அளவை செய்யும் சிறப்பு தாசில்தாரிடம் பேசினால், ரெகுலர் தாசில்தாரை பார் என்கிறார்கள். ரெகுலர் தாசில்தாரைப் பார்த்தால் சிறப்பு தாசில்தாரைப் பாருங்கள் என்று அலைக்கழிக்கிறார்கள். மீறி தடுத்தால் கைது செய்கிறார்கள். அரசாங்கத்தை எதிர்த்து நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. அதனால் இறந்துவிடலாம் என்று முடிவெடுத்து தற்கொலை செய்துகொள்ளுவதற்காகக் கிணற்றில் குதித்தேன். அதற்குள் என்னை வந்து காப்பாற்றிவிட்டார்கள்'' என்றார்.