வெளியிடப்பட்ட நேரம்: 01:48 (05/07/2018)

கடைசி தொடர்பு:01:48 (05/07/2018)

பாரம்பரியத்தை மறந்ததுதான் நோய்ப் பெருக்கத்திற்கு காரணம் - சித்த மருத்துவர்!

”பாரம்பர்ய உணவுப் பொருட்களை மறந்து, ஒதுக்கியதன் காரணமாகவே, நோய்களின் எண்ணிக்கையும், நோயாளிகளின் எண்ணிக்கையும்  பெருக ஆரம்பித்துள்ளது என சித்த மருத்துவர் ராஜலெட்சுமி’ தெரிவித்துள்ளார். 

சித்த மருத்துவர்

தூத்துக்குடி மாவட்ட சித்த மருத்துவத்துறை, வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவை இணைந்து ''இயற்கையைத் தேடி'' என்ற தலைப்பில் நடத்திய  சித்த மருத்துவக் கண்காட்சி மற்றும் சிறப்பு மருத்துவ முகாம்  ஸ்ரீவைகுண்டம், ஸ்ரீகுமரகுருபர சுவாமிகள் கலைக்கல்லூரியில் நடைபெற்றது.

இம் முகாமில், மாவட்ட சித்த மருத்துவர் ராஜசெல்வி பேசுகையில், ”இன்றுள்ள கம்யூட்டர் உலகத்தில் நாகரீகம் என்ற பெயரில் நாம் அனைவரும் பாரம்பர்யம் அனைத்தையும் மறந்து விட்டோம்.  இயற்கையான உணவுகளை உண்டு வந்த நாம், தற்போது, “பேஷன்” எனச் சொல்லிக் கொண்டு பீஸா, பர்கர், விதையில்லாத பழங்கள், காய்கறிகளை உண்ணுகிறோம். இவற்றை உண்பதால் ஆண்களுக்கு மலட்டுத்தன்மை, பெண்களுக்கு சினைப் பைகளில் நீர்க்கட்டி எனப் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுகிறது.

இவை மட்டுமல்ல, ரசாயன உரம் மற்றும் ரசாயனப் பூச்சிக்கொல்லிகள் பயன்படுத்தி விளைவிக்கப்படும் காய்கறிகள், பழங்கள், கீரைகள் ஆகியவற்றை உண்பதாலும் பல நோய்கள் வருகின்றன.  இந்த நிலை மாற வேண்டுமென்றால், மீண்டும் ''இயற்கையைத் தேடி'' என்ற ரீதியில் இயற்கை முறையில் விளைந்த காய்கறிகள், பழங்களை உண்ண வேண்டும். அத்துடன், வரகு, பனிவரகு, சாமை, குதிரைவாலி, கம்பு, சோளம், தினை ஆகிய சிறுதானியங்களையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முன்பெல்லாம் கிராமங்களில் உள்ள மக்கள் 90 வயது, 100 வயது வரை கூட உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். இதற்கு காரணம் பாரம்பர்ய உணவுப் பொருட்கள்தான்.  

பாரம்பரிய உணவுப் பொருட்களை ஒதுக்கியதன் காரணத்தினால்தான், நோய்களின் எண்ணிக்கையும், நோயாளிகளின் எண்ணிக்கையும் பெருக ஆரம்பித்தது. எனவே, சத்தான உணவுகளை உண்பதற்கு கற்றுக் கொள்ள வேண்டும். அதனைப் வழக்கப்படுத்திக் கொள்ள வேண்டும்.  உடல் உழைப்புடன், சத்தான இயற்கை உணவுகளை உண்டால் மட்டுமே ஆரோக்கியமாக நோயின்றி வாழமுடியும்.” என்றார். 

தொடர்ந்து, மூலிகைகளின் பயன்கள் குறித்து சிறப்பு கண்காட்சி மூலமாக வரிசையாக காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த துளசி, தூதுவளை, சிறியாநங்கை, பெரியா நங்கை, ஓம வள்ளி, ஆகிய 20-க்கும் மேற்பட்ட மூலிகைகச் செடிகள் ஒவ்வொன்றையும் அடையாளப்படுத்தி, அதன் பெயர், தாவரவியல் பெயர், சிறப்புகள், பயன்கள், பயன்படுத்தும் விதம் ஆகியவை குறித்து பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது.

அதனைத்தொடர்ந்து சித்த மருத்துவத்தின் பயன்கள்,  சினைப்பையில் நீர்க்கட்டி வராமல் தடுப்பது குறித்தும், மகளிர் உடல் நலம் ஆகியவை  குறித்தும் எடுத்துரைக்கப்பட்டது. தொடர்ந்து மாணவ, மாணவியர்களுக்கு சிறப்பு சித்த மருத்துவ ஆலோசனை முகாமும் நடைபெற்றது.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க