வெளியிடப்பட்ட நேரம்: 03:00 (05/07/2018)

கடைசி தொடர்பு:03:00 (05/07/2018)

தூத்துக்குடியில் எருது கட்டும் விழா; 50 காளைகள், 200 மாடுபிடி வீரர்கள் பங்கேற்பு!

பல்லாக்குளம் கிராமத்தில் உள்ள முனீஸ்வரர் கோயில் திருவிழாவை  முன்னிட்டு நடந்த எருது கட்டு நிகழ்ச்சியில் 50க்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் இறங்கின. இதில் 200க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டனர். 

எருது

தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகில் உள்ள பல்லாகுளம் கிராமத்தில் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் கோயில், வடக்குவா செல்லியம்மன், உச்சிமாகாளியம்மன்  கோயில் கொடை உற்சவத் திருவிழா,  கடந்த மாதம் ஜூன் 28-ம் தேதி தொடங்கியது. இக்கோயிலில் கடந்த 27-ம் தேதி சாமியை எழுந்தருளல் செய்து ஊர் விளையாட செல்லுதல், 29-ம் சிறப்பு பூஜை, மதுக்குடம், பால்குடம், முளைப்பாரி வளர்ப்பு ஆகியவை நடந்தது. கடந்த ஜூலை 3-ம் தேதி சிறப்பு பூஜை மற்றும்  எருது கட்டு வடம் முறுக்க செல்லுதல் அய்யனார் சாமிக்கு உருவம் நிறுவி எழுந்தருளல், பட்டாணி சாய்வுக்கு சர்க்கரை வைத்து சிறப்பு பூஜை ஆகியவை நடந்தது.  

மாலையில் அய்யனார் சாமி உருவம் எடுத்து சென்று கொடியேற்றம், சாமி திருவிழா ஆட்டம் மற்றும் நள்ளிரவு 12 மணிக்கு சாமக்கொடை  நடந்தது. இன்று  கயிறு குத்தி, பால்குடம், ஆயிரங்கண் பானை, மதுபானை, முளைப்பாரி எடுத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தன. தொடர்ந்து, எருது கட்டும் விழா நடைபெற்றது.  ஜல்லிக்கட்டு போல் காளையை அடக்காமல் நீண்ட வைக்கோல் கயிற்றால் கட்டி அடக்குவதே எருது கட்டும் நிகழ்ச்சி ஆகும்.  கருப்பசாமி கோயிலில் இருந்து வடம் எடுத்து வரபட்டு முனியசாமி கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு அந்த வடம் கட்டப்பட்டது. இன்று எருது கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை மற்றும் நெல்லை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட காளைகள் களத்தில் சீறிப் பாய்ந்தன. 200-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்து கொண்டு மாடுகளைப் பிடித்தனர். 

மாடுபிடி வீரர்களை அங்கு குவிந்திருந்த கிராம மக்கள் கை தட்டி உற்சாகப்படுத்தினர். தொடர்ந்து, இதில் மாடுகளைப் பிடித்த இளைஞர்கள் பரிசுகள் வழங்கப்பட்டன. கோயில் கொடைத் திருவிழா மற்றும் எருது கட்டும் திருவிழாவை முன்னிட்டு பல்லாக்குளம் மற்றும் சுற்றுப்பகுதி கிராம மக்கள் எருது கட்டும் விழாவைக் காண குவிந்தனர்.

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க