ஐந்து ஆண்டுகளாக நீளும் மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி..! புலம்பும் பொதுமக்கள்

கரூரில் ஐந்து வருடங்களுக்கு மேலாக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகள் ஜவ்வாக இழுத்துக் கொண்டிருப்பதாக பொதுமக்கள் புலம்பி வருகிறார்கள்.

 மருத்துவக்கல்லூரி

கடந்த 2013 ம் வருடம் அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த செந்தில்பாலாஜி முயற்சியில் கரூருக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்க திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போதைய முதல்வர் ஜெயலலிதாவால் 110 விதியின் கீழ் இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையோடு அறிவிக்கப்பட்ட புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை இரண்டு வருடங்களுக்கு முன்பே கட்டி திறக்கப்பட்டது. ஆனால் கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்படாமல் ஜவ்வாக இழுத்தடிக்கப்படுவதாக மக்கள் புலம்பி வருகிறார்கள்.

செந்தில்பாலாஜி வாங்கல் குப்புச்சிப்பாளையத்தில் அமைக்க முயன்றார். ஆனால்,எம்.ஆர்.விஜயபாஸ்கர் சணப்பிரட்டிக்கு இந்த திட்டத்தை கொண்டு போனார். இதனை எதிர்த்து செந்தில்பாலாஜி தரப்பு கோர்ட்டுக்கு போனது. ஆனால்,கோர்ட் தடையை உடைத்து எம்.ஆர்.விஜயபாஸ்கர் தரப்பு சணப்பிரட்டியிலேயே மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை அமைத்து வருகிறது. ஆனால்,"கட்டுமான பணிகள் இவர்கள் இருவரின் பொல்லாத அரசியல் சண்டையால் ஜவ்வாக இழுத்துக் கொண்டிருக்கிறது" என்று கரூர் மக்கள் புலம்பி கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில்,சணப்பிரட்டியில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை குடியிருப்பு கட்டுமானப்பணிகளை பொதுப்பணித்துறை (கட்டடம்) திருச்சி மண்டல தலைமைப் பொறியாளர் கே.பிரபாகர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது பேசிய தலைமைப்பொறியாளர் பிரபாகர், "கரூர் மாவட்ட மக்களின் நலன் காப்பதற்காக ரூ.229.46 கோடி மதிப்பில் 11,77,933 சதுர அடி பரப்பளவில் நடைபெற்று வரும் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை கட்டுமானப்பணிகள் மற்றும் விடுதி, குடியிருப்புகள் கட்டட கட்டுமானப்பணிகளை அலுவலர்களுடன் ஆய்வு செய்யப்பட்டது. இப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டில் கொண்டுவர அலுவலர்களுக்கு உரிய ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்பட்டது" என்று தெரிவித்தார். ஆனால், மக்களோ, "மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டுமானப் பணிகளை விரைவாக முடிக்க அறிவுரை வழங்க வேண்டியது அலுவலர்களுக்கு அல்ல. அமைச்சருக்கும், முன்னாள் அமைச்சருக்கும்தான்" என்கிறார்கள் மக்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!