வெளியிடப்பட்ட நேரம்: 04:00 (05/07/2018)

கடைசி தொடர்பு:04:00 (05/07/2018)

கேரளாவில் இருந்து மதுரைக்கு கடத்த முயன்ற 50 லட்சம் மதிப்பிலான ஏலக்காய் பறிமுதல்..!

கேரள மாநிலம் ராஜகுமாரியில் இருந்து மதுரைக்கு ஏலக்காய் கடத்திவந்த வாகனத்தை வணிகவரித்துறை அதிகாரிகள் இன்று பறிமுதல் செய்த சம்பவம் தேனி மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

முறையாக வரி கட்டாமல், கேரளாவில் இருந்து மதுரைக்கு ஏலக்காய் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில், இன்று, தேனி மாவட்டம் போடி அருகே உள்ள இரட்டை வாய்க்கால் பகுதியில் வணிகவரித்துறை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கேரள மாநிலம் ராஜகுமாரியில் இருந்து 80 மூட்டை ஏலக்காய் ஏற்றிவந்த மினி லாரியை பிடித்தனர். விசாரணையில், ஜோயி என்பவருக்கு சொந்தமான அந்த மினி லாரியில் ஏற்றிவரப்பட்ட ஏலக்காய் மூட்டைகளுக்கு முறையாக வரி செலுத்தவில்லை என்றும் அதன் மதிப்பு 50 லட்சம் ரூபாய் என்பதும் தெரியவந்தது. வாகனத்தை கைப்பற்றிய வணிக வரித்துறை அதிகாரிகள் விசாரணையை முடிக்கிவிட்டுள்ளனர்.


கடந்த 22ம் தேதி ஏலக்காய் வர்த்தகத்தில் மொத்த வியாபாரிகள் தங்களது கருப்பு பணத்தை பயன்படுத்தி ஏலக்காய் கொள்முதல் செய்வதாக எழுந்த சர்ச்சை காரணமாக மொத்த வியாபாரிகள் போரட்டத்தில் இறங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. வேறொரு மாநிலத்தில் இருந்து ஏலக்காய் எப்படி வரி செலுத்தாமல் தமிழக எல்லைக்குள் வந்தது? இதன் பின்னால் அதிகாரிகள், அரசியல்வாதிகள் தொடர்பு உள்ளதா? அரசை ஏமாற்றி வரி ஏய்ப்பு செய்து இது போன்று தினம் தினம் ஏலக்காய் கடத்தப்படுகிறதா? என சரமாரியாக கேள்விகளை முன்வைக்கிறார்கள் சமூக ஆர்வலர்கள். இந்த ஏலக்காய் கடத்தலுக்கு பின்னால் யார் யாரெல்லாம் உள்ளனர் என்று முறையாக விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும்.