வெளியிடப்பட்ட நேரம்: 04:45 (05/07/2018)

கடைசி தொடர்பு:04:45 (05/07/2018)

''கடமையைச் செய்யாத அ.தி.மு.க., தி.மு.க..!'' ராமதாஸ் வருத்தப்படுவது ஏன்..?

ராமதாஸ்

''மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டியது ஆளுங்கட்சியின் பணி. அதில், ஏதேனும் தவறு நடந்தால் அதை அம்பலப்படுத்தி, ஆட்சியாளர்களின் தவறுகளை திருத்த வேண்டியது எதிர்க்கட்சியின் பணி. ஆனால், தமிழக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தங்களின் கடமைகளை செய்யவில்லை'' என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க 30-வது ஆண்டு தொடக்கவிழாவை முன்னிட்டு, ''பாட்டாளி சொந்தங்களே...!'' என்று கட்சி தொண்டர்களுக்கு டாக்டர் ராமதாஸ் எழுதியுள்ள கடிதத்தில், ''பாட்டாளி மக்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்ற உன்னத நோக்கத்துடன் தொடங்கப் பட்ட பாட்டாளி மக்கள் கட்சி வரும் 16-ஆம் தேதி, 29 ஆண்டுகளை நிறைவு செய்து 30-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஐம்பதாண்டுகளையும், நூற்றாண்டையும் கடந்த அரசியல் இயக்கங்களை விட, மக்களுக்கு அதிக சேவை செய்தது பா.ம.க என்பது தான் நமக்கு பெருமையாகும்.

கொள்கைகளும், நோக்கங்களும், செயல்திட்டங்களும் செம்மையாக இருப்பதால் தான், கடந்த 30 ஆண்டுகளில் தொடங்கப்பட்ட பல கட்சிகள் இப்போது அடையாளம் இல்லாமல் போய்விட்ட நிலையில் பா.ம.க மட்டும் தமிழக அரசியலின் தவிர்க்க முடியாத சக்தியாக திகழ்ந்து வருகிறது. சென்னைக் கடற்கரை சீரணி அரங்கில் பத்து லட்சத்திற்கும் மேற்பட்டத் தொண்டர்கள் கூடியிருந்த வரலாற்று நிகழ்வில் தொடங்கப்பட்ட பாட்டாளி மக்கள் கட்சி, அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டு அரசியல் எந்த திசையில் பயணிக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகிறது.

கடந்த 29 ஆண்டுகளில் மக்கள் பிரச்சினைக்காக பாட்டாளி மக்கள் கட்சி எத்தனையோ போராட்டங்களை நடத்தி வெற்றி பெற்றிருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தின் அனைத்து சீரழிவுகளுக்கும் காரணமான மதுவுக்கு எதிராக போராடி வரும் பாட்டாளி மக்கள் கட்சி, கடந்த சில ஆண்டுகளில் மட்டும் குறிப்பிடத்தக்க அளவில் வெற்றிகளைக் குவித்திருக்கிறது. தமிழகத்திலிருந்த மதுக்கடைகளின் எண்ணிக்கை இப்போது பாதிக்கும் கீழாக குறைந்ததற்கு பா.ம.க மட்டுமே காரணமாகும்.

தமிழக அரசியல் இப்போது கடினமான காலக்கட்டத்தை கடந்து கொண்டிருக்கிறது. மக்களுக்கான நலத்திட்டங்களை செயல்படுத்த வேண்டியது ஆளுங்கட்சியின் பணி. அதில், ஏதேனும் தவறு நடந்தால் அதை அம்பலப்படுத்தி, ஆட்சியாளர்களின் தவறுகளை திருத்த வேண்டியது எதிர்க்கட்சியின் பணி. ஆனால், தமிழக ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தங்களின் கடமைகளை செய்யவில்லை என்பது தான் உண்மை. அதனால்தான் மக்கள் தங்கள் பிரச்சினைகளை தீர்த்து வைக்க பா.ம.க-வைத் தேடி வருகின்றனர்.

மக்களுக்கு நன்மை பயக்கும் அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்த முதல் தேவை ஆட்சி அதிகாரம் தான். அந்த இலக்கை நோக்கி நாம் வேகமாகவும், விவேகமாகவும் பயணிக்க வேண்டும். அதன் தொடக்கமாக பா.ம.க-வின் 30-ஆம் ஆண்டு விழாவை இதுவரையில்லாத வகையில் சிறப்பாகக் கொண்டாட வேண்டும். பாட்டாளி மக்கள் கட்சியின் ஆதரவுத் தளத்தை விரிவுப் படுத்த வேண்டும். மொத்தத்தில் 30-ஆவது ஆண்டின் தொடக்கம் தமிழகத்தில் ஆட்சியைக் கைப்பற்றி மக்களுக்கு நன்மைகளை செய்வதற்கான புனிதப் பயணத்தின் தொடக்கமாக அமைய வேண்டும்'' என்று வலியுறுத்தி உள்ளார்.

நீங்க எப்படி பீல் பண்றீங்க