வெளியிடப்பட்ட நேரம்: 07:40 (05/07/2018)

கடைசி தொடர்பு:07:40 (05/07/2018)

'தேர்தல் வியூகம் சொல்லித்தரும் அமித் ஷா..!' 9-ம் தேதி சென்னை வி.ஜி.பி கடற்கரையில் கூட்டம்

அமித் ஷா

மத்தியில் ஆட்சியில் இருக்கும் பி.ஜே.பி-யின் தேசியத் தலைவர் அமித் ஷா, 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுவருகிறார். கடந்த 2014-ம் ஆண்டு, நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே அக்கட்சி வெற்றிபெற்றது. எனவே, வரும் தேர்தலில் கணிசமான இடங்களில் வெற்றிபெற வேண்டும் என்று அக்கட்சியின் தலைமைக்கு டெல்லி உத்தரவிட்டுள்ளது. அதற்கான வேலைகளை மாநில நிர்வாகிகள் செய்துவருகிறார்கள். 

இந்த நிலையில், அமித் ஷா-வின் தமிழக வருகை இதுவரை மூன்று முறை தள்ளிப்போனது. இப்போது, வரும் 9- ம் தேதி, தமிழக பி.ஜே.பி நிர்வாகிகளை  அவர் சந்திப்பது உறுதியாகியிருக்கிறது. அமித் ஷா, 8-ம் தேதி இரவு சென்னை வருகிறார். அவர், 9-ம் தேதி காலை முதல் நிர்வாகிகளைச் சந்திக்கிறார். உயர்மட்டக் குழு உறுப்பினர்கள், பாராளுமன்ற, சட்டமன்றக் குழுக்களின் பொறுப்பாளர்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோரை தனித்தனியாகச் சந்திக்க ஏற்பாடுசெய்யப்படுள்ளது. 9-ம் தேதி மாலை, அனைத்து நிர்வாகிகளும் வி.ஜி.பி கடற்கரை ரிசார்ட்டில் கூடுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் வியூகம்குறித்து அமித் ஷா பேசுகிறார். 9-ம் தேதி இரவு 8 மணி அளவில் இந்தக் கூட்டம் முடிகிறது. இரவு சென்னையில் தங்கிவிட்டு, மறுநாள் 10-ம் தேதி டெல்லி செல்கிறார். 

வி.ஜி.சந்தோஷம் வீட்டில் விருந்து சாப்பிடும் தமிழக பிஜேபி நிர்வாகிகள்

நாடாளுமன்றத் தேர்தல்குறித்து அமித் ஷா ஆலோசனை வழங்கும் பணிகளுக்கிடையில், தமிழகத்தில் சில முக்கியஸ்தர்களை சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. மாற்றுக் கட்சியிலிருந்து வி.ஐ.பி-க்கள் பலரைக் கொண்டுவரும் வேலைகளும் இன்னொருபுறம் நடந்துகொண்டிருக்கின்றன. சினிமா பிரபலங்களைச் சந்திக்க வாய்ப்பு இருப்பதாகவும் பி.ஜே.பி-யினர் சொல்கிறார்கள். 

அமித் ஷா வருகைகுறித்து, கட்சியின் மாநில பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''நமக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி, 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் வழிகாட்டல் விஷயமாக ஜூலை 9-ம் தேதி, அகில பாரதத் தலைவர் அமித் ஷா தமிழகம் வருகிறார். இந்த நேரத்தில், தமிழகத்தில் மாபெரும் சக்தியாக நாம் உருவாக்கிய சக்தி கேந்திரம், மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்களை அவர் சந்திப்பது மிகவும் உற்சாகத்தையும் பலத்தையும் கூட்டும் என்பதால் சக்தி கேந்திரம், மகாசக்தி கேந்திரப் பொறுப்பாளர்களது கூட்டத்துக்கு ஏற்பாடாகி உள்ளது.

இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டத்தில் நாம் ஒவ்வொருவரும் கலந்துகொள்ள வேண்டும். சென்னை ஈஞ்சம்பாக்கம் வி.ஜி.பி கடற்கரை ரிசார்ட்டில்,  ஜூலை 9-ம் தேதி மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெறும். மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாநில அணி மற்றும் பிரிவு நிர்வாகிகள், பாராளுமன்றத் தொகுதி நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாவட்ட அணி மற்றும் பிரிவுத் தலைவர்கள், மண்டல் தலைவர்கள், மண்டல் பொதுச்செயலாளர்கள், மகா சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள் ஆகியோர் பங்கேற்க வேண்டும். இதுகுறித்த தகவல் ஒவ்வொருவருக்கும் அனுப்பப்பட்டுள்ளது. தங்கள் வருகையை உறுதி செய்ய வேண்டுகிறேன்'' என்று கூறியுள்ளார்.

அமித் ஷா எடுத்துக்கொடுக்கும் நாடாளுமன்றத் தேர்தல் வியூகம், தமிழக பி.ஜே.பி-யில் எழுச்சியை உருவாக்குமா..?

நீங்க எப்படி பீல் பண்றீங்க