வெளியிடப்பட்ட நேரம்: 11:10 (05/07/2018)

கடைசி தொடர்பு:11:10 (05/07/2018)

விசாரணை நடத்திய போலீஸ் -மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட கேரள தம்பதி!

கேரள மாநிலம் சங்ஙணாசேரியில், தங்கநகை செய்துவந்த தொழிலாளியையும் அவரது மனைவியையும் போலீஸார் விசாரணை நடத்தியதால், மனம் உடைந்து தற்கொலை செய்துகொண்டனர். இதையடுத்து, காங்கிரஸ் கூட்டணி சார்பில் இன்று அந்த தாலுகா பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை

கேரள மாநிலம், கோட்டயம் மாவட்டம் சங்ஙணாசேரியில் நகை செய்யும் தொழிலாளி சுனில்குமார். இவர், சி.பி.எம் நிர்வாகி சஜிகுமாரிடம் நகைச்செய்யும் தொழிலகத்தில் பணிபுரிந்துவந்திருக்கிறார். இந்த நிலையில், நகையில் எடை குறைவாக இருப்பதாக சஜிகுமார் சங்ஙணாசேரி காவல் நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறார். இதையடுத்து, கடந்த செவ்வாய்க்கிழமை சுனில்குமார் மற்றும் அவரது மனைவி ரேஷ்மா ஆகியோரை போலீஸார் விசாரணைக்கு அழைத்திருக்கிறார்கள். சுமார் 12 மணிநேரம் நடந்த விசாரணையில், சுனில்குமாரை காவலர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. மேலும், எடைகுறைந்த நகைக்கு ஈடாக 8 லட்சம் ரூபாய் உடனடியாக வழங்க வேண்டும் என காவலர்கள் மிரட்டி பேப்பரில் எழுதிவாங்கிவிட்டு, வீட்டுக்கு அனுப்பியதாகக் கூறப்படுகிறது. வீட்டுக்கு வந்த சுனில்குமார் மற்றும் அவரது மனைவி ரேஷ்மா இருவரும் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டனர். ஏற்கெனவே, வராப்புழா பகுதியில் போலீஸ் கஸ்டடியில் இருந்த அப்பாவி இளைஞர் பலியான சம்பவம் சற்று ஓய்ந்த  நிலையில், தற்போது போலீஸ் விசாரணையில் தம்பதி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைக் கண்டித்து, காங்கிரஸ் கூட்டணிக் கட்சி சார்பில் இன்று சங்ஙணாசேரி தாலுகா அளவிலான பந்த் அறிவிக்கப்பட்டுள்ளது.