மனைவி மகளைக் கொன்று கணவர் தற்கொலை -சிலிண்டரை வெடிக்கவைத்த விபரீதம்!

சிலிண்டரை வெடிக்கச் செய்து,  மனைவி குழந்தையுடன் கணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம், மதுரையில் இன்று காலை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிலிண்டரை வெடிக்க வைத்து தற்கொலை


மதுரை திருப்பரங்குன்றம் பாலாஜி நகரில் வசித்துவரும் ராமமூர்த்திக்கு, காஞ்சனா என்ற மனைவியும், அட்சயா என்ற 6 வயது மகளும் உள்ளனர். இவர் சாக்லேட், பிஸ்கட்  ஏஜென்ஸி எடுத்து நடத்திவந்துள்ளார். கடந்த ஆறு மாதங்களாகத் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.  கடந்த சில மாதங்களாக வீட்டுக்கு வாடகைகூட கொடுக்க முடியாமல், குடும்பச் சூழ்நிலை மிகவும் கஷ்டத்தில் இருந்துள்ளது. இதனால் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது. இந்நிலையில், இன்று அதிகாலை  3 மணியளவில், வீட்டில் இருந்த சிலிண்டரை படுக்கை அறை அருகே வைத்து, அதை திறந்து ராமமூர்த்தி பற்றவைத்ததாகக் கூறப்படுகிறது.  சிலிண்டர் பயங்கர சத்ததுடன் வெடித்து, மனைவி காஞ்சனா மற்றும் மகள் அட்சயா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சிலிண்டர் வெடித்த சத்தம் கேட்டு அருகிலுள்ளவர்கள் வந்து பார்த்தபோது,  ராமமூர்த்தி உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தார். அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர் போகும் வழியில் அவர் உயிரிழந்தார். ராமமூர்த்தி இப்படி ஒரு மோசமான முடிவு எடுக்கப்போகிறார் என்பது அவர் மனைவிக்குத் தெரியாது. தூங்கிக்கொண்டிருக்கும்போதே, அவரும் மகளும் பலியாகியுள்ளனர். இந்தச் சம்பவம், அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. திருநகர் காவல்துறையினர் தற்போது விசாரணை நடத்திவருகின்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!