செருப்புக் கடையில் போதைப் பொருள்கள் விற்பனை - திருச்சி போலீஸ் அதிரடி நடவடிக்கை

சிறுவர்களுக்குப் போதைப்பொருள் விற்பனைசெய்த  மூன்று வடமாநில இளைஞர்கள் திருச்சியில் கைதுசெய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

போதை பொருள் விற்ற வட மாநில இளைஞர்கள்

திருச்சி பெரியகடை வீதியில், வணிக நிறுவனங்கள், கடைகள் பெருமளவு உள்ளதால், எப்போதும் பரபரப்பாக மக்கள் கூட்டம்  உள்ள பகுதி.  இப்பகுதியில், தடைசெய்யப்பட்ட பான்பராக், குட்கா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்கள் விற்பதாகக் காந்தி மார்க்கெட் காவல்துறைக்குத் தகவல் கிடைத்தது. அதனடிப்படையில், போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்வேல்குமார் தலைமையிலான போலீஸார் பெரியகடை வீதியில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டனர். அதில், பெரியகடை வீதியில் ராஜஸ்தானைச் சேர்ந்த பலர், செருப்பு விற்கும் கடைகள் வைத்திருப்பதோடு, பெல்ட் உள்ளிட்ட பொருள்களை விற்பனைசெய்கிறார்கள். அங்கு சோதனை நடத்தப்பட்டது.

திருச்சி பெரியகடை வீதியில், மொபெட் பைக் ஒன்றில் இரண்டுபேர் பெரிய மூட்டைகளுடன் வந்தனர். அந்த மூட்டைகளைச் சோதனை செய்தபோது, அதில் அரசால் தடைசெய்யப்பட்ட பான்பராக், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களை விற்பனைக்காகக் கொண்டு சென்றது தெரியவந்தது. மேலும், அவற்றைக் கொண்டுவந்த 27வயதுடைய பெரியகடை வீதி சின்ன கம்மாளத்தெருவைச் சேர்ந்த பாபுதாராமின் மகன் ஒக்காராம், போலராமின் மகன் தேவராம் உள்ளிட்ட இருவரும் கைதுசெய்யப்பட்டனர். அதையடுத்து, அவர்கள் போதைப் பொருள்கள் கொண்டுசெல்லப் பயன்படுத்திய மொபெட் பைக்கையும் போலீஸார் பறிமுதல்செய்தனர்.  கைதான இருவரிடமும் நடத்திய தகவலின்  அடிப்படையில், ஒக்காராமின் சகோதரர் மங்களராம் என்பவரையும் போலீஸார் கைதுசெய்தனர். கைதான 3 பேரிடம் இருந்தும் 2 மூட்டை புகையிலை, 1 மூட்டை பான்பராக் ஆகியவற்றை போலீஸார் பறிமுதல்செய்தனர்.அமல்ராஜ்

 போலீஸ் விசாரணையில், போதைப்பொருள்கள் விற்பனைக்குத் தடை விதித்திருப்பதால், அவற்றைப் பதுக்கிவைத்து, செருப்பு விற்கும் கடை, பெல்ட் கடை ஆகியவற்றில் வைத்து சிறுவர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்துவந்தது தெரியவந்தது.

இதுகுறித்து திருச்சி போலீஸ் கமிஷ்னர் அமல்ராஜ், ‘போதைப்பொருள்கள் விற்பனை செய்ததாகக் கைதான 3 பேரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். கடந்த சில ஆண்டுகளாக அவர்கள் பெரியகடை வீதியில் வாடகைக்கு வீடு எடுத்துத் தங்கி இருந்துள்ளதும், அவர்கள், சிறுவர்களுக்கும் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனைசெய்து வருவதும் தெரியவந்ததை அடுத்து கைதுசெய்யப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா, பான்பராக் உள்ளிட்ட போதைப் பொருள்களை வைத்திருந்தாலோ அல்லது விற்பனை செய்தாலோ அவர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதுபோன்ற பொருள்களைப் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகே விற்பனைசெய்தால், பொதுமக்கள் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும்’ எனவும் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!