விவசாயி தற்கொலை விவகாரத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம் | Two SI's who were involved in farmer's suicide are transferred

வெளியிடப்பட்ட நேரம்: 12:45 (05/07/2018)

கடைசி தொடர்பு:12:45 (05/07/2018)

விவசாயி தற்கொலை விவகாரத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்கள் பணியிட மாற்றம்

நெல்லை மாவட்டம் வள்ளியூரில், போலீஸார் தாக்கிய அவமானம் தாங்க முடியாமல், விவசாயி தற்கொலைசெய்துகொண்ட விவகாரத்தில் தொடர்புடைய இரு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒரு போலீஸை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

விவசாயி தற்கொலை - சக்திவேல்

நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகேயுள்ள குமாரபுதுகுடியிருப்பு கிராமத்தைச் சேர்ந்த சக்திவேல் என்ற விவசாயி, கடந்த மாதம் 26-ம் தேதி, வள்ளியூருக்குச் சென்று வயலுக்கு பூச்சிமருந்து வாங்கிக்கொண்டு ஊர் திரும்பியுள்ளார். வழியில் இருந்த டாஸ்மாக் மதுக்கடையில் மதுகுடித்துவிட்டு, இருசக்கர வாகனத்தில் கிளம்பியவரை வாகனச் சோதனையில் இருந்த போலீஸார் நிறுத்தியுள்ளனர். அப்போது, சக்திவேலை வள்ளியூர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீஸார் கடுமையாகத் தாக்கியுள்ளனர். 

பொதுமக்கள் முன்னிலையில் போலீஸார் சரமாரியாகத் தாக்கியதால் அவமானம் அடைந்த அவர், ஏற்கெனவே வாங்கி வைத்திருந்த பூச்சி மருந்தை போலீஸார் கண்முன்பாகவே குடித்துவிட்டு சுருண்டுவிழுந்தார். அவருக்கு, வள்ளியூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு, பின்னர் ஏர்வாடி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து நாகர்கோவில் அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காகக் கொண்டுசெல்லும் வழியில் உயிரிழந்தார். 

முன்னதாக, சக்திவேல் அளித்த வாக்குமூலத்தில், தன்னை போலீஸார் தாக்கியதால் மனம் உடைந்து பூச்சிமருந்து குடித்ததாகத் தெரிவித்தார். இந்தச் சம்பவம் காரணமாக சக்திவேல் குடும்பத்தினர் போலீஸார் மீது குற்றம் சாட்டினார்கள். அவர் தற்கொலை செய்யக் காரணமானவர்கள்மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தினர். இந்தநிலையில், இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் காவலரைப் பணியிட மாற்றம்செய்து நெல்லை மாவட்ட எஸ்.பி., அருண் சக்திகுமார் உத்தரவிட்டுள்ளார். 

அதன்படி, வள்ளியூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர்களான எபின், முன்னீர்பள்ளம் காவல்நிலையத்துக்கும் சஜீவ், நாங்குநேரி காவல்நிலையத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். காவலரான எபின் ஏஞ்சல், களக்காடு காவல்நிலையத்துக்கு மாற்றப்பட்டுள்ளார். ஆனால், அவர்களைப் பணியிட மாற்றம் செய்திருப்பது மட்டும் போதுமானதல்ல, அவர்கள்மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என உயிரிழந்த சக்திவேலின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.