`தாமதமான கட்டுமானப் பணி... கான்ட்ராக்டருக்கு அபராதம்!' நுகர்வோர் கோர்ட் அதிரடி

குறித்த காலத்துக்குள் கட்டுமானப் பணியை முடிக்கத் தவறிய கான்ட்ராக்டருக்கு அபராதம் விதித்து, நெல்லை மாவட்ட நுகர்வோர் கோர்ட் அதிரடியாகத் தீர்ப்பு அளித்துள்ளது.

நுகர்வோர் கோர்ட்

நெல்லை மாவட்டம் வீரவநல்லூரைச் சேர்ந்தவர் கணபதி. 70 வயது நிரம்பிய இவர், பி.எஸ்.என்.எல் நிறுவனத்தில் அலுவலராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். ஓய்வுபெற்றதும் கிடைத்த பணப் பலன்களைக்கொண்டு வீட்டை விரிவாக்கம் செய்ய முடிவுசெய்துள்ளார். இது தொடர்பாக, அங்குள்ள கான்ட்ராக்டரைச் சந்தித்து ஆலோசித்துள்ளார். அதன்படி, கடந்த 2014-ம் ஆண்டு ஜூன் 15-ம் தேதி, தனது வீட்டின் மாடியைக் கட்டுவதற்கு இருவரும் ஒப்பந்தம்செய்துள்ளனர். 

அன்றைய தினத்தின் நிலவரப்படி, சதுர அடிக்கு ரூ.1200 என முடிவெடுக்கப்பட்ட நிலையில், 1135 சதுர அடிக்கு மொத்தம் ரூ.13,62,000 என முடிவுசெய்யப்பட்டது. அத்துடன், இந்தப் பணியை 8 மாத காலத்துக்குள் முடித்துக்கொடுப்பதாக கான்ட்ராக்டர் ஒப்புக்கொண்டுள்ளார். அதைத் தொடர்ந்து, வீடு கட்டும் பணி தொடங்கியுள்ளது. கணபதி, ஒப்பந்தப்படி கான்ட்ராக்டரிடம் பணத்தைக் கொடுத்துவிட்டார். 

ஆனால், ஒப்பந்தப்படி  அவர், 8 மாத காலத்துக்குள் மாடிவீடு கட்டிக்கொடுக்கவில்லை.  தொடர்ந்து இழுபறிசெய்ததால், கணபதி மனம் உளைச்சலுக்கு உள்ளானார். அதனால், இந்த விவகாரத்தை வழக்கறிஞர் பிரம்மா மூலம் நெல்லை நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்செய்தார். அவர் வழக்கு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து, சுதாரித்துக்கொண்ட கான்ட்ராக்டர், மாடி வீட்டை வேகமாகக் கட்டி முடித்துள்ளார். 

வழக்கறிஞர் பிரம்மாஇருப்பினும், இந்த வழக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி நாராயணசாமி மற்றும் உறுப்பினர் சிவமூர்த்தி ஆகியோர், கான்ட்ராக்டர் கட்டுமானப் பணியை காலதாமதமாகச் செய்துமுடித்தது சேவைக் குறைபாடு என்றும், மனுதாருக்கு ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு ரூ.25,000 நஷ்ட ஈடும், வழக்குச் செலவுக்கு ரூ.3,000-ம் சேர்த்து மொத்தம் 28,000 ரூபாயை ஒரு மாத காலத்துக்குள் கொடுக்க உத்தரவிட்டனர்.

கான்ட்ராக்டர் நேரடியாக மனுதாரிடம் நஷ்ட ஈட்டுத் தொகையையும் வழக்குச் செலவையும் வழங்க வேண்டும் என்றும், தவறும் பட்சத்தில் 6 சதவிகித வட்டியுடன் சேர்த்து வழங்கவும் உத்தரவிட்டனர்.

இதுபற்றி பேசிய வழக்கறிஞர் பிரம்மா, ‘’மனுதாரர் பலமுறை வலியுறுத்தியும் கான்ட்ராக்டர் ஒப்பந்தப்படி உரிய நேரத்தில் கட்டுமானத்தை முடித்துக்கொடுக்கவில்லை. அதனால், இதுவும் சேவைக்குறைப்பாடுதான் என்பதை நீதிமன்றத்தில் வலியுறுத்தினோம். அதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு, இந்தத் தீர்ப்பை அளித்திருக்கிறது. இழப்பீட்டுத் தொகையையும் அபராதத்தையும்  நேரடியாக மனுதாரரிடம் வழங்கவும் உத்திரவிடப்பட்டுள்ளது’’ என்றார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!