வெளியிடப்பட்ட நேரம்: 13:30 (05/07/2018)

கடைசி தொடர்பு:15:36 (05/07/2018)

`பெண் தோழிகளைப் பார்க்க முடியாது..!' - சசிதரூரை சீண்டிய சுப்பிரமணியன் சுவாமி 

சுனந்தா புஷ்கர் மரண வழக்கில், சசிதரூருக்கு முன்ஜாமீன் வழங்கியது டெல்லி பாட்டியாலா நீதிமன்றம். `இதில், சசிதரூர் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை' என கருத்து தெரிவித்திருக்கிறார் பா.ஜ.க-வைச் சேர்ந்த சுப்பிரமணியன் சுவாமி. 

சுப்பிரமணியன் சுவாமி

காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சரான சசி தரூரின் மனைவி, சுனந்தா புஷ்கர். இரண்டு மனைவிகளை விவாகரத்துசெய்த நிலையில், சுனந்தா புஷ்கரை திருமணம் செய்துகொண்டார், சசி தரூர். இந்நிலையில், கடந்த 2014-ம் ஆண்டு டெல்லியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார் சுனந்தா. ` அவர் தற்கொலை செய்யவில்லை; அவரது மரணத்துக்கு சசி தரூர் முக்கியக் காரணம்' என்று தகவல்கள் வெளியானது. இந்த மரணம் தொடர்பாக வழக்குப்பதிவுசெய்த போலீஸார், சசி தரூக்கு எதிரான ஆவணங்களை நீதிமன்றத்தில் தாக்கல்செய்தனர். இதையடுத்து, டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார் சசி தரூர். அவரது மனுவை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. 

சுப்பிரமணியன்

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சுப்பிரமணியன் சுவாமி, `அவர், திகார் சிறையில் இல்லை.  ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியுடன் அமர்ந்துகொள்ளலாம். ஏனெனில், அவர்களும் ஜாமீனில் இருக்கிறார்கள். முன்ஜாமீன் கிடைத்ததுகுறித்து சசி தரூர் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை. அதே நேரத்தில், அவர் வெளிநாட்டுக்குச் செல்ல முடியாது. உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள அவரது பெண் தோழிகளையும் பார்க்க முடியாது' என்றார்.