வெளியிடப்பட்ட நேரம்: 12:30 (05/07/2018)

கடைசி தொடர்பு:12:42 (05/07/2018)

`தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க முடியாது!’ - ஸ்டெர்லைட் ஆலை விவகாரத்தில் பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு

ஸ்டெர்லைட் ஆலையை மூடும் தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க, பசுமைத் தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

பசுமைத் தீர்பாயம்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி, நீண்ட நாள்களாகப் போராட்டம் நடைபெற்றுவந்தது. கடந்த மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற நூறாவது நாள் போராட்டத்தின்போது ஏற்பட்ட கலவரத்தினால், போலீஸார் துப்பாகிச் சூடு நடத்தினர். இதில், 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதன் பின்னர்,' ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படும்' எனத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. அதைத் தொடர்ந்து ஆலையும் மூடப்பட்டது. இந்நிலையில், ஆலையை மீண்டும் திறக்க அனுமதி கோரியும் தமிழக அரசு அறிவித்த உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரியும் ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் பசுமைத் தீர்ப்பாயத்தில் கடந்த 3-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைப் பசுமைத் தீர்ப்பாயம் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. விசாரணையில், தமிழக அரசின் உத்தரவுக்குத் தடை விதிக்க பசுமைத் தீர்ப்பாயம் மறுப்புத் தெரிவித்துள்ளது. மேலும், இதுகுறித்து வரும் 18-ம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்கவும் உத்தரவிட்டு, அன்றைய தினத்துக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. பசுமைத் தீர்ப்பாயத்தின் முழு விசாரணை நிறைவடைந்து, இறுதித் தீர்ப்பு வரும்வரை ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.