மனம் மாறியதால் காதலனைக் கொலைசெய்த மலேசியப் பெண்! - விசாரணையில் அதிர்ச்சித் தகவல்  | Chennai police arrests Four in murder case

வெளியிடப்பட்ட நேரம்: 12:53 (05/07/2018)

கடைசி தொடர்பு:12:53 (05/07/2018)

மனம் மாறியதால் காதலனைக் கொலைசெய்த மலேசியப் பெண்! - விசாரணையில் அதிர்ச்சித் தகவல் 

கொலை செய்யப்பட்ட விஜயராகவன்

சென்னையில் நடந்த கொலைச்  சம்பவத்தில், ஒரு மாதத்துக்குப் பிறகு குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தவறான நட்பால் இந்தக் கொலை நடந்துள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகில், கடந்த மே மாதம் 15-ம் தேதி, வாலிபர் ஒருவர் வெட்டுக்காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரின் சடலத்தை மீட்ட ராயபுரம் போலீஸார், அவர் யார் என்று விசாரித்தனர். உதவி கமிஷனர் தனவேல், இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட் ஆகியோர் நடத்திய விசாரணையில், வெட்டுக்காயங்களுடன் கிடந்த வாலிபர், திருவாரூர் மாவட்டம் மேல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த விஜயராகவன் என்று தெரியவந்தது.  விஜயராகவன் குறித்த தகவலை போலீஸார் சேகரித்தனர். அப்போது, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அவர், மலேசியாவுக்குச் சென்று  பூ கட்டும் வேலை பார்த்த தகவல் கிடைத்தது. அப்போது, மலேசியாவில் சூப்பர் மார்க்கெட் நடத்தும் நிர்மலா என்ற பெண்ணுடன் விஜயராகவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதை நிர்மலாவின் கணவர் ரவி, கண்டித்துள்ளார். ஆனால், இவர்கள் இருவரின் நட்பு தொடர்ந்துள்ளது.  இதனால், விஜயராகவன் மரணத்தில் ரவிமீது போலீஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அதுதொடர்பாக போலீஸார் விசாரித்தபோது திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,``விஜயராகவன் சடலத்தைப் பார்த்தபோதே, அது கொலை என்று கண்டுபிடித்துவிட்டோம். அவரைக் கொலை செய்தவர்கள் யார் என்றுதான் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக விசாரித்துவந்தோம். அப்போது, தவறான நட்பு காரணமாக விஜயராகவன் கொலைசெய்யப்பட்டது தெரியவந்தது. 

 சுதா - நிர்மலா

மலேசியாவில் விஜயராகவன் வேலைபார்த்தபோது நிர்மலாவுடன் பழகியுள்ளார். நிர்மலாவின் கடையில் வேலைபார்க்கும் கார்த்தி என்பவரின் அம்மா, சுதா. இவரின் வீடு திருச்சியில் உள்ளது. திருச்சிக்கு அடிக்கடி வரும் நிர்மலா, சுதாவின் வீட்டில் தங்குவதுண்டு. அப்போது, அங்கு விஜயராகவன் வந்துசெல்வார். இந்த நிலையில், நிர்மலாவைத் தவிர இன்னும் சில பெண்களுடன் விஜயராகவனுக்கு பழக்கம் ஏற்பட்டது.   தன்னுடன் பழகிய பெண்களுடன் எடுத்த செல்ஃபி போட்டோக்களை நிர்மலாவுக்கு விஜயராகவன் அனுப்பியுள்ளார். அதைப் பார்த்ததும் அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதனால், நிர்மலாவும் ரவியும் சேர்ந்து, விஜயராகவனைக் கொலைசெய்யத் திட்டமிட்டுள்ளனர். தொடர்ந்து, மலேசிய ஹோட்டலில் மாஸ்டராக வேலைப்பார்த்த காசிமேடு விநாயகபுரத்தைச் சேர்ந்த செந்தில்சிவா மூலம் விஜயராகவனைக் கொலைசெய்யத் திட்டமிட்டு, அதற்காக  ஒரு தொகையும் பேரம் பேசப்பட்டுள்ளது. 

சம்பவத்தன்று, விஜயராகவனை திருவாரூரிலிருந்து  சென்னைக்கு அழைத்து வந்துள்ளார் நிர்மலா. பிறகு கொலைக்கும்பல், விஜயராகவனை மது குடிக்க வைத்துள்ளனர். மதுபோதையிலிருந்த விஜயராகவனின் காலில் உள்ள நரம்பை செந்தில் சிவாவும், அவரின் கூட்டாளிகள் சார்லஸ், முத்துகுமரன் ஆகியோரும் சேர்ந்து வெட்டியுள்ளனர். அதனால், ரத்தம் முழுவதும் வெளியேறி இறந்துள்ளார் விஜயராகவன். பிறகு, அவரின் சடலத்தை ஸ்டான்லி அரசு மருத்துவமனை அருகில் தூக்கி வீசிவிட்டுச் சென்றுள்ளனர். கொலைக்கு உதவியதாக சுதாவையும் மற்றும் கொலைசெய்த செந்தில்சிவா, சார்லஸ், முத்துகுமரன் ஆகியோரையும் கைதுசெய்துள்ளோம். கொலைக்குப் பயன்படுத்திய கத்தியையும் பறிமுதல்செய்துள்ளோம். இந்த வழக்கில் நிர்மலா, ரவியைத் தேடி வருகிறோம். அவர்கள் மலேசியாவில் இருப்பதால், அங்குள்ள போலீஸார் மூலம் அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்" என்றனர். 

 விஜயராகவனைக் கொலை செய்தவர்கள்

 கொலையைக் கண்டுபிடித்த விதமும் வித்தியாசமானது. விஜயராகவனின் சொந்த ஊரான திருவாரூரில் முகாமிட்ட இன்ஸ்பெக்டர் ராஜா ராபர்ட், அவர்குறித்த முழுவிவரங்களையும் சேகரித்தார். அப்போதுதான் போலீஸாரின் சந்தேக வளைத்துக்குள் சுதா சிக்கினார். சம்பவத்தன்று, விஜயராகவனை சென்னைக்கு அழைத்துவந்து, வடசென்னையில் உள்ள பூங்காவின் அருகில் உள்ள முட்டுச்சந்தில் வைத்து கொலைசெய்துள்ளனர். பிறகு, ஆட்டோ டிரைவர் சார்லஸ், முத்துக்குமரன் ஆகியோர் விஜயராகவனின் சடலத்தை ஆட்டோவில் தூக்கிக்கொண்டு வந்து, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வீசியுள்ளனர். விஜயராகவனுக்கும் நிர்மலாவுக்கும் இரண்டு குழந்தைகள் பிறந்துள்ளதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. அதுதொடர்பாகவும் விசாரணை நடத்திவருகின்றனர். நிர்மலா, போலீஸில் சிக்கினால் இந்த வழக்கில் கூடுதல் தகவல் கிடைக்கும் என்று போலீஸார் எதிர்பார்க்கின்றனர்.