`நாள் முழுவதும் காத்திருந்தும் எந்த மாற்றமும் நிகழல!’ - புதுக்கோட்டையை உலுக்கிய கற்சிலை வதந்தி | 12 year old girl is going to change stone statue - Pudukottai viral rumour

வெளியிடப்பட்ட நேரம்: 14:00 (05/07/2018)

கடைசி தொடர்பு:14:00 (05/07/2018)

`நாள் முழுவதும் காத்திருந்தும் எந்த மாற்றமும் நிகழல!’ - புதுக்கோட்டையை உலுக்கிய கற்சிலை வதந்தி

‘12 வயது சிறுமி ஒருவர், கற்சிலையாக மாறப்போகிறார்’ என்கிற செய்திதான், புதுக்கோட்டை மாவட்டத்தின் ஹாட் நியூஸ்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தாலுகா, மணமேல்குடியை அடுத்துள்ளது அம்மாபட்டினம் கிராமம். இந்தக் கிராமத்தில் வாழும் பழனி - லட்சுமி தம்பதிக்கு 4 குழந்தைகள். அதில் மூன்றாவது பெண் குழந்தை, 12-வயது மாசிலா. அந்தப் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 6-ம் வகுப்பு படித்துவருகிறார். சிறுவயதிலிருந்தே மாசிலா மிகுந்த கடவுள் பக்தி உடையவராக இருந்துள்ளார்.  விரைவில், தான் சாமியாகப் போவதாக சக தோழிகளிடம் கூறிவந்தார். அதையடுத்து அவரின் பெற்றோர், தெரிந்த ஜோசியரிடம், மாசிலாவின் ஜாதகத்தைக் கொடுத்து பார்த்ததாகவும், அப்போது ஜோசியர், 13-வது வயதில் மாசிலா சாமி உருவில் கற்சிலையாக மாறிவிடுவார் என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

சிறுமி

இந்நிலையில், கடந்த 2-ம் தேதி மாசிலாவுக்குப் பிறந்தநாள். முதல்நாள் இரவு, வீட்டில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. அடுத்த நாள் காலை, மாசிலாவின் பிறந்தநாளை முன்னிட்டு பெற்றோர், உறவினர்கள், வாங்கிவந்த பிறந்தநாள் 'கேக்'கை வெட்டிப் பகிர்ந்துகொண்டார் மாசிலா. அடுத்து, அவரின் அம்மா லெட்சுமி மற்றும் உறவினர்கள், மாசிலாவுக்கு பட்டுச் சேலை உடுத்தி, தலையில் பூ வைத்து அலங்கரித்து அவரை ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். சிறுமி

மாசிலா, பிரசித்திப் பெற்ற மணமேல்குடி வடக்கூர் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் வளாகத்துக்கு அழைத்துவரப்பட்டார். இந்த நிலையில், பெண் குழந்தை கற்சிலையாக மாறப்போகிறார் என்கிற தகவல்  அக்கம்பக்கத்தில் காட்டுத்தீயாய்ப் பரவ, சுற்றுவட்டார கிராமங்களபெங்கும் பரவியது.

இதையடுத்து, அக்கம் பக்கமுள்ள பொதுமக்கள், பெண்கள் எனத் திரண்டுவந்த ஏராளமானோர் கோவில் வாசலில் கூடினர். நேரம் ஆக ஆக, பட்டுச் சேலையில் இருந்த மாசிலாவைப் பார்த்து பெண்கள் கூட்டம், ‘ஓம் சக்தி, பராசக்தி’ எனப் பக்தியுடன் கோசமிட்டதுடன் கும்மியடித்து, சிறுமி மாசிலாவை சுற்றிவந்தனர். ஆனால், சிறுமி மாசிலாவுக்கு அருள் வரவில்லை. அப்போது, கூட்டத்தில் இருந்த பெண் ஒருவருக்கு அருள் வந்து, இங்க ஏன் காத்திருக்கீங்க? நான் இன்னும் தயாராகவில்லை. குழந்தையைத் தேர்வுசெய்து வைத்திருக்கிறோம். 18 வயதில் மாசிலா கற்சிலையாக மாறுவார் எனச் சொல்ல, பரபரப்பு கூடியது. ஒருவழியாகக் கோயில் பூசாரி சுப்பிரமணியன், சிறுமி மாசிலா மற்றும் அவரது பெற்றோரை எச்சரித்து, வீட்டுக்கு அனுப்பி வைத்தார். இதையடுத்து, அங்கு கூடிநின்ற பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

இதுகுறித்து சிறுமி மாசிலாவின் தாய் லெட்சுமி, "மூணாவது பிரசவம் ரொம்ப சிரமமாப் போச்சு. அப்போ, அம்மன்கிட்ட வேண்டிக்கிட்டேன். வேண்டியபடி வேண்டுதலை சுப்பிரமணியன்நிறைவேற்றினேன். ஆனா, அப்பப்போ கனவுல சாமி வந்து, 'உனக்குத்தான் மூன்று குழந்தைகள் இருக்கே, எனக்கு ஒரு குழந்தையைக் கொடு; அது என் குழந்தை'னு சொல்லிச்சு. ஜோசியம் பார்த்தப்போ, வர்ற பிறந்தநாள்ல மாசிலா, பாம்பு வடிவத்துல கல்சிலையா மாறும்னு சொன்னாங்க. அதனால், பிறந்தநாள் அன்னைக்கு முழுமனதோடு பிள்ளையை அழைச்சுக்கிட்டுப் போய் அம்மன் கோயில்ல காத்திருந்தோம். அவள் சிலையாக மாறலை வந்துட்டோம்’ என்றார்.

அடுத்ததா, கோயில் அர்ச்சகரான சுப்பிரமணியன், ‘அந்தப் பொண்ணு கல்லாக மாறப்போவதாகக் கூறி கோயில் முன் கூடி நின்னாங்க. பலருக்கும் சாமி வந்தது. நீண்டநேரம் காத்திருந்தார்கள், ஆனாலும் அந்தச் சிறுமி மாசிலா உடலில் எந்த மாற்றமும் தென்படல. அதனால்தான், நாள் முழுவதும் காத்திருந்தவர்களை, வீட்டுக்குத் திருப்பி அனுப்பினேன். அதுக்குள்,'உயிருடன் இருக்கும் சிறுமி, கற்சிலையாகப் போகிறார்' என இந்த இளவட்ட பசங்க, நெட்டுல எல்லாம் போட்டுவிட, பிரச்னை அதிகமாகிடுச்சு’ என்றார்.

சிறுமி கற்சிலையாக மாறப் போகிறார் எனப் பரவிய செய் 'தீ' இன்னும் புதுக்கோட்டை மாவட்டத்தில் அடங்கவில்லை. அதனால், இப்போதும் பரபரப்பாகவே காணப்படுகிறது.

நீங்க எப்படி பீல் பண்றீங்க