வெளியிடப்பட்ட நேரம்: 14:20 (05/07/2018)

கடைசி தொடர்பு:14:24 (05/07/2018)

காந்தியைப் பேசும் ஆர்.எஸ்.எஸ் கோட்சேவை பின்பற்றுகிறது!: ராகுல் காந்தி சாடல்

மகாத்மா காந்தி குறித்துப் பேசும் ஆர்.எஸ்.எஸ் தலைவர்கள், நாதுராம் கோட்சேவைப்  பின்பற்றுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.

ராகுல் காந்தி

உத்தரப்பிரதேச மாநிலம் அமேதி தொகுதியில், இரண்டுநாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி,  அக்கட்சியினரிடையே   உரையாற்றினார். அப்போது,  “ ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மகாத்மா காந்தி குறித்துப் பேசுகிறார்கள். ஆனால், நாதுராம் கோட்சேவைப் பின்பற்றுகிறார்கள். சுதந்திரப் போராட்டத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரின் பங்களிப்பு எதுவும் இல்லை. ஆனால், அவர்கள் வரலாற்றைச் சிதைக்கிறார்கள். சுதந்திரப் போரட்டத்தில் காங்கிரஸ் தலைவர்களின் பங்களிப்பு ஒவ்வொரு நிகழ்விலும் இருந்தது” என்றார்.

மேலும் பேசிய ராகுல், காங்கிரஸ் சமூக வலைதள அணி விரிவாக்கம்செய்யப்பட உள்ளதாகவும், கட்சியினருக்கு இதுகுறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்தார். பரப்புரையின்போது, ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்குத் தக்க பதிலடிகொடுக்க வேண்டும் என்றார். முன்னதாக, நேற்று காலையில் மோடியின் புல்லட் ரயில் திட்டம்குறித்து ராகுல் விமர்சித்திருந்தார்.  புல்லட் ரயில்குறித்து பிரதமர் மோடி அதிகம் பேசிவருகிறார்; அது புல்லட் ரயில் இல்லை. அதை மேஜிக் ரயில் என்றுதான் கூற வேண்டும். அது, முழு வடிவம் பெறாது என்றார். பிரதமர் தனது ஜிஎஸ்டி, பணமதிப்பிழப்பு நடவடிக்கையின்மூலம் மக்களின் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து விஜய்மல்லையா மற்றும் நீரவ் மோடிக்கு வழங்கிவிட்டதாக ராகுல் குற்றம் சாட்டினார்