`பைக்கில் செல்லும் இருவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்!' - உயர் நீதிமன்றம் அதிரடி

இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் அவசியம் ஹெல்மெட் அணிய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஹெல்மெட்

சாலை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று நடைப்பெற்றது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரு சக்கர வாகனத்தில் செல்லும் இருவரும் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும். காரில் பயணம் மேற்கொள்ளும் அனைவரும் கட்டாயம் சீட்பெல்ட் அணிய வேண்டும் என தெரிவித்தனர். தனியார் நிறுவனங்களில் ஹெல்மெட் கட்டாயம் என்ற வாசகம் அடங்கிய பலகைகள் வைக்கப்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய நீதிபதிகள், இதுபோன்று காவல்துறை அலுவலகங்களிலும், அரசு அலுவலகங்களிலும் பலகைகளை வைக்கலாம் என கருத்துத் தெரிவித்தனர். கட்டாய ஹெல்மெட் மற்றும் சீட்பெல்ட் அணிவதை காவல்துறையினர் முதலில் பின்பற்ற வேண்டும் எனக் கூறினர்.

மேலும்,`இருசக்கர வாகன ஓட்டிகள் வண்ண விளக்குகளை எரியவிடுவது எதிரில் வருபவர்களின் கண்களைக் கூசச் செய்கிறது அதனைத் தடுப்பதற்கு என்ன  மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும் முகப்பு விளக்கில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்ட  வேண்டும் என்ற உயர்நீதிமன்ற உத்தரவு  எவ்வாறு பின்பற்றப்படுகிறது’’ என்பன குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய டிஜிபிக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை ஜூலை 27ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். ஹெல்மெட் சட்டத்தை முறையாக அமல்படுத்தப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும். பரிந்துரைகளை நிறைவேற்றியது குறித்தோ அல்லது நிறைவேற்றத் திட்டமிட்டது பற்றி அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!