வெளியிடப்பட்ட நேரம்: 16:20 (05/07/2018)

கடைசி தொடர்பு:16:20 (05/07/2018)

கொள்ளிடத்தில் மணல் எடுக்க அனுமதியுங்கள்'- கலெக்டரிடம் பொதுமக்கள் மனு

கோயில்கள் கட்டுமானப் பணிக்கு கொள்ளிடம் ஆற்றிலிருந்து மணல் எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும் என்று அரியலூர் மாவட்டம் குணமங்கலம் காலனி தெருவில் வசிக்கும் பொதுமக்கள் திரண்டு வந்து ஆட்சித்தலைவரிடம் மனு கொடுத்தனர். 

                                மணல் அள்ள அனுமதி கேட்ட பொதுமக்கள்

அந்த மனுவில், `எங்களது தெருவில் மாரியம்மன், காளியம்மன், பிள்ளையார், கருப்பு சாமி என மொத்தம் 7 மிகப் பழைமைவாய்ந்த கோயில்கள் உள்ளன. அதுவும், தற்போது சிதைந்த நிலையிலும் உள்ளது. எனவே, ஊர் பொதுமக்கள் சார்பில், இந்தக் கோயில்கள் கட்ட முடிவெடுத்து வருகிறோம். இக் கோயில் கட்டுமானப் பணிக்குத் தேவையான மணலை ஊருக்கு அருகில் இருக்கும் கொள்ளிடம் ஆற்றில் எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி அளிக்க வேண்டும்" என்று மனு அளித்தனர். 

                         கொள்ளிடம் ஆறு

மனு அளித்த சிலரிடம் பேசினோம். ``கட்சிக்காரர்கள் இரவு பகலாக கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளிக்கொண்டிருக்கிறார்கள். காவல்துறையினர் அவர்களிடம் பணத்தை வாங்கிக்கொண்டு விட்டுவிட்டு விடுகிறார்கள். நாங்கள் கோயில் கட்டுவதற்காக மணல் எடுத்தபோது கொலைக் குற்றம் செய்ததுபோல் எங்களிடம் பிரச்னை செய்கிறார்கள். அதனால்தான் ஆட்சியரிடம் முறையாகக் கோயில் கட்ட அனுமதி கேட்டு மனு அளித்துள்ளோம். ஆட்சியரும் விசாரித்துச் சொல்வதாக சொல்லியிருக்கிறார்" என்று முடித்துக்கொண்டார்கள்.