``வளர்ச்சியைத் தவிர்க்க முடியாது... ஆனால்?” எட்டு வழிச்சாலைக்கு மாற்று கோரும் விவசாயிகள் | Farmers requesting another way for 8 way road

வெளியிடப்பட்ட நேரம்: 17:40 (05/07/2018)

கடைசி தொடர்பு:17:40 (05/07/2018)

``வளர்ச்சியைத் தவிர்க்க முடியாது... ஆனால்?” எட்டு வழிச்சாலைக்கு மாற்று கோரும் விவசாயிகள்

எட்டு வழிச்சாலை, கெயில் குழாய் பதிப்பு, உயர் மின்னழுத்த கோபுரம் போன்ற திட்டங்களை விவசாய நிலங்களைப் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும் என உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் கு.செல்லமுத்து வலியுறுத்துகிறார்.

விவசாயிகள் கோரிக்கை தொடர்பாக செல்லத்து

உழவர் உழைப்பாளர் கட்சியின் ஏற்பாட்டில் இன்று மாலை தஞ்சாவூர் திலகர் திடலில் உழவர் தின மாநாடு நடைபெறவுள்ளது. இதற்காக தஞ்சாவூரில் தங்கியுள்ள இக்கட்சியின் தலைவர் கு.செல்லமுத்து ``மக்கள் தொகை பெருக்கத்தின் காரணமாகவும் எதிர்கால தேவைக்காகவும் வளர்ச்சித் திட்டங்களை உருவாக்குவது தவிர்க்க முடியாதது. ஆனால், இதுபோன்ற திட்டங்களை விவசாய நிலங்கள் பாதிக்காத வகையில் செயல்படுத்த வேண்டும். கெயில் குழாய்களை தேசிய நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே பாதைகளின் வழியாக செயல்படுத்தலாம். உயர் மின்னழுத்த கோபுரங்களுக்கான கம்பிகளை விளைநிலங்களுக்கு மேலே கொண்டு செல்லாமல், பூமியின் அடியில் கொண்டு செல்லலாம். சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டம் விவசாய நிலங்களைப் பாதிக்காத வகையில் மாற்று வழியைக் கையாள வேண்டும். அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் விவசாயத்துக்குப் பயன்படாத நிலங்கள் ஏராளமாக உள்ளன. அதன் வழியாக எட்டு வழிச்சாலையை அமைக்க வேண்டும்.” என்றார்.

மேலும், “தற்பொழுது எட்டுவழிச்சாலை அமைப்பதற்காக விவசாய நிலங்களுக்கு அரசு அறிவித்துள்ள இழப்பீட்டுத் தொகை நியாயமான தொகையாகவே உள்ளது. ஒரு தென்னை மரத்துக்கு 50 ஆயிரம் ரூபாய், ஒரு ஹெக்டேர் நிலத்துக்கு 9.75 கோடி ரூபாய் ஏற்கக்கூடியதாகவே இருந்தாலும்கூட விவசாயிகள் இதை நம்ப மறுக்கிறார்கள். காரணம் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்காகவும், சேலம், ஆத்தூர் உள்ளிட்ட இன்னும் பல்வேறு சாலை திட்டங்களுக்காகவும் ஏற்கெனவே நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு பல ஆண்டுகளாக இழப்பீடு வழங்கப்படாமலே உள்ளது. இழப்பீடு கொடுக்காமல் நாம் ஏமாற்றப்படுவோம் என விவசாயிகள் அஞ்சுகிறார்கள். இதனால்தான் நிலத்தை தர மறுக்கிறார்கள். நிலத்தில் கல் பதிப்பதற்கு முன்பாகவே இழப்பீடு மற்றும் அந்தக் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு வேலை உள்ளிட்டவைகளை வழங்க வேண்டும். மத்திய மாநில அரசுகள் எந்த ஒரு சூழலிலும் விவசாயிகளை ஏமாற்ற நினைக்கக்கூடாது” என்றார்.