வெளியிடப்பட்ட நேரம்: 16:40 (05/07/2018)

கடைசி தொடர்பு:16:40 (05/07/2018)

``காவிரியின் குறுக்கே அணை கட்டப்படும்” - பட்ஜெட்டில் அறிவித்த குமாரசாமி

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி  இன்று  சட்டப்பேரவையில் முதல் பட்ஜெட்டைத்  தாக்கல் செய்தார்.

குமாரசாமி

கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி சட்டப்பேரவையில் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார். குமாரசாமி முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட் இது. பேரவையில் பேசிய குமாரசாமி,  ``விவசாயிகளுக்கான பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்வதாகவும் அதன்படி ரூ.2 லட்சம் வரையுள்ள பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும். இதன்மூலம் மொத்தமாக 34 ஆயிரம் கோடி கடன்கள் தள்ளுபடி செய்யப்படுகிறது” எனத் தெரிவித்தார். மேலும், 'முதற்கட்டமாக 31 டிசம்பர் 2017வரை திருப்பிச்செலுத்தாமல் இருக்கும் கடன்களை தள்ளுபடி செய்வதாகவும். விவசாயிகள் தாங்கள் பெற்ற கடனை உரிய காலத்தில் திருப்பி செலுத்தியிருந்தால் அந்தத்தொகை அல்லது 25 ஆயிரம் இதில் எது குறைவோ அந்தத்தொகை திருப்பி வழங்கப்படும்' என்றார். 

பெங்களூரில் உள்ள இந்திரா கேன்டீனுக்கு வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன்காரணமாக மாநிலத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் தாலுகாக்களில் 247 கேன்டீனில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். எரிபொருள் மீதான வரியையும் இந்த பட்ஜெட்டில் உயர்த்தியுள்ளார். அதன்படி பெட்ரோல் மீதான வரியை 30 சதவிகிதத்திலிருந்து 32 சதவிகிதமாகவும், டீசல் மீதான வரியை 19 சதவிகிதத்திலிருந்து 21 சதவிகிதமாக உயர்த்தியுள்ளார். இதன் மூலம் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.1.14 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.12 காசுகள் உயரும் எனத் தெரிகிறது. மேலும், ”பெங்களூருக்கு மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய மேகதாதுவில் காவிரியின் குறுக்கே அணை கட்டப்படும். மத்திய அரசு அனுமதியளித்ததும் அதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்படும்” எனக் கூறினார்.