”டி.ஜி.பி நியமனத்தில் விதிமுறைகள் பின்பற்றப்பட்டுள்ளன” -பேரவையில் முதல்வர் விளக்கம்!

யு.பி.எஸ்.சிக்கு பட்டியல் அனுப்பப்பட்டு அதன் ஆலோசனைக்குப் பிறகே டி.ஜி.பி நியமனம் நடைபெற்றுள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி

சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மாதம் தொடங்கி, வரும் 9 -ம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த நிலையில், இன்று பேரவையில் பேசிய ஸ்டாலின், `தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு பாதுகாக்கும் பொறுப்புள்ள பதவி காவல்துறை இயக்குநர் பதவி. தற்போதுள்ள டி.ஜி.பி-க்கு 2 வருடம்  நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இது உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக உள்ளது. டி.ஜி.பி மேல் சி.பி.ஐ.யில் வழக்கு உள்ள நிலையில், அவர் தொடர்ந்து பதவி நீடிப்பது ஏற்புடையதாக இல்லை.  இதனால் பல ஐ.பி.எஸ் அதிகாரிகளுக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் உள்ளது. பல மூத்த ஐ.பி.எஸ். அதிகாரிகள் பதவி கிடைக்காமல் பதவி ஓய்வு பெற்றுவிடுவர்.  எனவே, அரசு செய்தது தவறு என்பதை உணர்ந்து அதை திருத்திக்கொள்ள வேண்டும்’ என்று கூறினார்.

ஸ்டாலின்

இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதல்வர், `சட்டத்திட்டங்களுக்கு உட்படுத்தப்பட்டுதான் டி.ஜி.பி நியமனம் நடைபெற்றுள்ளது.  உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பின் அடிப்படையிலே டி.ஜி.பி நியமிக்கப்பட்டுள்ளார். யு.பி.எஸ்.சி-க்குப் பட்டியல் அனுப்பப்பட்டு ஆலோசனைக்குப் பிறகே நியமனம் நடைபெற்றுள்ளது. தற்போது வழங்கிய உச்சநீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவை அரசு வரும் காலங்களில் பின்பற்றும்’ என பேரவையில் முதல்வர் விளக்கம் அளித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!