குடிநீர் ஒப்பந்த நகலைக் கேட்டால் கைதா? -கொந்தளிக்கும் கோவை சி.பி.எம்

கோவையில், 24 மணி நேரம் குடிநீர் விநியோகம் செய்வது தொடர்பாக சூயஸ் நிறுவனத்துடன் போடப்பட்ட ஒப்பந்த நகலை வெளியிடக்கோரி மாநகராட்சி அலுவலகத்தில் போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் கவுன்சிலர் பத்மநாபன் கைது செய்யப்பட்டார்.

குடிநீர் ஒப்பந்த நகலை கேட்ட பத்மநாபன் கைது

கோவை மாநகராட்சியில், 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் செய்வதற்காக சூயஸ் என்ற தனியார் நிறுவனத்துடன், மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்துக்கு அரசியல் கட்சிகளும் சமூக ஆர்வலர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள்  கவுன்சிலர் பத்மநாபன்,  கோவை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயனை இன்று நேரில் சந்தித்து மனு அளித்தார். அதில் அவர், இந்த திட்டத்துக்காக கடந்த நவம்பர் மாதம் மாநகராட்சி தனியார் நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் நகல், ஜனவரி மாதம் சூயஸ் நிறுவனத்திற்கு கொடுத்த வேலைக்கான உத்தரவு நகல் மற்றும் இந்த ஒப்பந்தம் குறித்து மாநகராட்சி மன்றத்தால் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் நகல் ஆகியவற்றை கேட்டிருந்தார். 

ஆனால், மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்த நகல்களை வெளியிட மறுத்துவிட்டது. இதனால், தனிநபராக பத்மநாபன் மாநகராட்சி அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டார். சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக தனிநபராக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட பத்மநாபனை போராட்டத்தைக் கைவிடும்படி, உக்கடம் போலீஸார்  எச்சரித்தனர். ஆனால், குடிநீர் ஒப்பந்தம் தொடர்பான நகல்களை மாநகராட்சி நிர்வாகம் மக்கள் பார்வைக்காக வெளியிட வேண்டும் எனவும், அதுவரை மாநகராட்சி அலுவலகத்தில் காத்திருக்கும் போராட்டத்தைத் தொடரப் போவதாக பத்மநாபன் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து, முன்னாள் கவுன்சிலர் பத்மநாபனை காவல் துறையினர்  கைது செய்தனர். பத்மநாபனின் கைதைக் கண்டித்து, சி.பி.எம் தொண்டர்கள், கொடிகளுடன் உக்கடம் காவல் நிலையம் முன்பு குவிந்துள்ளனர். இதனால், அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!