ஸ்டெர்லைட் போராட்டக் குழு வழக்கறிஞர் வாஞ்சிநாதனுக்கு நிபந்தனை ஜாமீன்!

ஸ்டெர்லைட்டுக்கு எதிரான போராட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும்  மக்கள் உரிமை பாதுகாப்பு மைய ஒருங்கிணைப்பாளரான வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீதான அனைத்து வழக்குகளிலிருந்தும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. 

வாஞ்சிநாதன்  கைது

ஸ்டெர்லைட் போராட்டக்குழுவுக்கு சட்டஆலோசகராக பணியாற்றிய வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தூத்துக்குடி காவல்துறையினர் ஏராளமான வழக்குகளைப் பதிவு செய்தனர். கடந்தவாரம் அவரை சென்னை விமான நிலையத்தில் கைது செய்தனர். பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டவரை, இரண்டு நாள் காவலில் எடுத்து போலீஸார் விசாரித்தனர். நேற்று மதுரையிலுள்ள அவரின் வீட்டிலும், அலுவலகத்திலும் தூத்துக்குடி காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

வாஞ்சிநாதன்

இந்தநிலையில், அவருக்கு ஜாமீன் கோரி உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் அஜ்மல்கான் மனுத் தாக்கல் செய்திருந்தார்.  இதை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது தொடரப்பட்ட ஸ்டெர்லைட் தொடர்பான ஒன்பது வழக்குகள் மற்றும் கொடைக்கானல் வழக்கு என மொத்தம் 10 வழக்குகளில் அவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ஸ்டெர்லைட் விவகாரத்தில் அவர் மீது போடப்படுகிற அனைத்து வழக்குகளிலும் முன் ஜாமீன் வழங்கியும் உத்தரவிட்டார். ஸ்டெர்லைட் வழக்குகளில் காவல்துறை இறுதி அறிக்கை தாக்கல் செய்யும்வரை, ஸ்டெர்லைட் தொடர்பான போராட்டங்கள், கூட்டங்களில் வாஞ்சிநாதன் ஈடுபடக்கூடாது, மதுரையில் தங்கியிருக்க வேண்டும், விசாரணைக்கு போலீஸ் சம்மன் அனுப்பினால் ஆஜராக வேண்டும் ஆகிய நிபந்தனைகளுடன் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!