மல நாற்ற அறை, ரத்தக்கறை போர்வை... சிறை சித்திரவதையில் சமூக ஆர்வலர் முகிலன்!

மல நாற்ற அறை, ரத்தக்கறை போர்வை... சிறை சித்திரவதையில் சமூக ஆர்வலர் முகிலன்!

சுற்றுச்சூழல் போராளியான முகிலன் திடீரென மதுரை மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு கடந்த சில வருடங்களாகப் பயன்படுத்தப்படாமல் இருந்த சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைக்கு உள்ளாக்கப்படுவதாகப் புகார் எழுந்திருக்கிறது.

கூடங்குளம் அணு உலைக்கு எதிரான போராட்டத்தில் முகிலன் பங்கேற்றபோது அவர்மீது பல வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகள் தொடர்பாகக் கடந்த ஆண்டு செப்டம்பர் 18-ம் தேதி அவரைக் கூடங்குளம் போலீஸார் கைது செய்தனர். நிலத்தடி நீர் கொள்ளையடிக்கப்படுவதைக் கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்று திரும்புகையில், போலீஸார் அவரை வலுக்கட்டாயமாகக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

அதன் பின்னர், கடந்த 300 நாள்களுக்கும் மேலாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அவர் அடைக்கப்பட்டிருந்தார். அவர் மீதான வழக்குகளை விரைவாக நடத்தி முடிக்குமாறு நீதிமன்றத்தில் பலமுறை மனு அளித்தும் வழக்கு விசாரணை இன்னும் தொடங்கப்படவே இல்லை. இந்த நிலையில் பாளையங்கோட்டை சிறையிலிருந்து அவர் திடீரென மதுரை சிறைக்கு மாற்றப்பட்டார். பாளையங்கோட்டை சிறையில் இருந்தபோதே அவரைக் கரூர் மாவட்ட போலீஸார், பழைய வழக்கு ஒன்றில் தேசத்துரோக சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். இந்த நிலையில் அவரை மதுரை சிறைக்கு மாற்றம் செய்து கொடுமைக்கு உள்ளாக்குவதாகப் புகார் எழுந்துள்ளது.

வழக்கறிஞர் செல்வகுமார்இது பற்றி பேசிய முகிலனின் வழக்கறிஞரான செல்வக்குமார், ``கடந்த ஜூன் 24-ம் தேதி அதிகாலை 4.30 மணிக்கு பாளையங்கோட்டை சிறைக்காவலர்கள் முகிலனை எழுப்பி `உடனே கிளம்பு.. உன்னை மதுரை சிறைக்கு மாற்றுகிறோம்’ எனத் தெரிவித்துள்ளனர். அவர் அதற்கான காரணத்தைத் தெரிவிக்குமாறு கேட்டுள்ளார். 

அதிகாரிகள் அவரிடம், `எங்களுக்கு எதுவும் தெரியாது. டி.ஜி.பி, ஏ.டி.ஜி.பி-யிடமிருந்து உத்தரவு வந்திருக்கிறது’ என்று தெரிவித்த சிறைத்துறை அதிகாரிகள், முறையாக யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் அவரை மதுரை சிறைக்கு மாற்றியிருக்கிறார்கள். மதுரை சிறைக்கு வந்த பிறகு கடந்த மூன்றாண்டுகளாகப் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்ட ஒரு பழைய தனி அறையை முகிலனுக்கு ஒதுக்கியிருக்கிறார்கள். ஜன்னல்கள் எல்லாம் மூடப்பட்ட நிலையில், காற்றுகூடப் புக முடியாத அளவுக்கு உள்ள அந்த அறைக்கு அவர் அழைத்துவரப்பட்ட பின்னர்தான் அந்த அறையே கழுவப்பட்டிருக்கிறது. அறை முழுவதும் மனித மல நாற்றம் அடித்துள்ளது. வேறு வழியில்லாமல் அந்த அறையில் அன்றைய இரவு படுத்திருக்கிறார். படுத்த சில நிமிடங்களிலேயே கொசுக்கள் அவரை மொய்த்துக் கடிக்கத் தொடங்கி இருக்கின்றன. 

அதனால் துளியும் தூங்க முடியாத முகிலன், பல மணி நேர பொறுமைக்குப் பிறகு சிறைக்காவலர்களிடம் போர்த்திக்கொள்ள போர்வை தரும்படி கேட்டுள்ளார். எங்கிருந்தோ எடுத்துவரப்பட்ட ஒரு பழைய வெள்ளை நிறப் போர்வை அவருக்குத் தரப்பட்டுள்ளது. அப்படியும் கொசுக்கள் அவரை மொய்த்ததால், காலையில் அந்த வெள்ளைப் போர்வை முழுவதும், கொசு உறிஞ்சிய முகிலனின் இரத்தத்தால் சிவப்பானது மட்டுமே மிச்சம்.

சிறையில் சித்ரவதை

முகிலனின் தனிச்சிறைக்குப் பின்னால் திறந்த வெளியில் மலக்குழாயும், திறந்த நிலை மலக்கிடங்கும் உள்ளது‌. அதன் நாற்றமும் அதன் கொசுக்களும்தாம் அந்த அறை முழுவதும் நிரம்பியிருப்பதாக அவரைப் பார்க்கச் சென்ற என்னிடம் தெரிவித்தார். `என்னை சுமார் இரண்டாயிரம் கொசுக்கள் கடித்திருக்கும், துளியும் தூக்கமில்லை. இந்தச் சிறைக்கு மாற்றப்பட்ட நாளிலிருந்து தூங்கவே இல்லை. இப்படியே போனால் சில நாள்களில் எனக்கு மனநலம் பாதிக்கப்பட்டு விடுமோ என அஞ்சுகிறேன்’ என்றார். 

இதையெல்லாம் சிறைக் கண்காணிப்பாளரிடம் சொன்ன போதிலும், அவருக்கு மாற்று அறையை ஒதுக்காத சிறைக் கண்காணிப்பாளர், `கொசுவத்தி வேண்டுமானால் தரச் சொல்கிறேன்’ என பதில் சொல்லியிருக்கிறார். அவருக்கு வேறு அறை ஒதுக்கப்படவேயில்லை. ஏற்கெனவே கரூர் அரவக்குறிச்சியில் அவர் மீது தேச துரோக வழக்கு பதியப்பட்டுள்ள நிலையில் இப்போது அவர் மீது தேசியப் பாதுகாப்பு சட்டத்தில் வழக்குப் போட அரசு தயாராகி வருகிறது.

நீதிமன்றத்திலும் அவருடைய கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையே உள்ளது. தொடர்ந்து அவர் சித்திரவதைகளுக்கு உள்ளாகி வருகிறார். கொசுக்கடியில் அவதிப்படும் அவர் எந்த நேரத்திலும் டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களால் பாதிக்கப்படும் ஆபத்து இருக்கிறது. சிறைக்கைதியை வழக்கறிஞர்கள் மாலை 4 முதல் 5 மணி வரை பார்க்கலாம் என்கிற நிலையில், நானும் வழக்கறிஞர் முத்துகிருஷ்ணனும் அவரைச் சந்திக்க 4-ம் தேதி மனு போட்டோம். ஆனால், அவரை 4.45 மணிக்குத்தான் அழைத்து வந்தார்கள். வழக்கறிஞர்களைக் கூட சந்திக்க அனுமதிக்காத அளவுக்கு அவருக்கு எதிரான நெருக்கடிகள் தொடர்கின்றன. அவரது உடல் நிலை பற்றி எங்களுக்குக் கவலையாக இருக்கிறது’’ என்றார் வேதனையுடன். 

ஒரு பக்கம் அவரை தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் சூழலில், மறு பக்கம் சிறைக்குள் சித்திரவதைக்கு உள்ளாக்கப்படும் சம்பவத்தால் முகிலனின் நண்பர்கள் உறவினர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரை சிறையிலிருந்து மீட்க சட்ட ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!