வெளியிடப்பட்ட நேரம்: 19:40 (05/07/2018)

கடைசி தொடர்பு:19:40 (05/07/2018)

வேலை நாள்களில் நீட் பயிற்சி வழங்கினால் அங்கீகாரம் ரத்து! - தமிழக அரசு அதிரடி

தனியார் பள்ளிகளில் விடுமுறை நாள்களைத் தவிர வேலை நாள்களில் நீட் பயிற்சி வழங்கினால் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செங்கோட்டையன்

கடந்த மாதம் தொடங்கிய சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்றைய பேரவைக் கூட்டத்தில் தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறைப்படுத்தும் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டது. அப்போது பேசிய தி.மு.க உறுப்பினர் தங்கம் தென்னரசு, ``நீட் தேர்வுக்குப் பின்பு தனியார் பள்ளிகள் நீட் பயிற்சி மையங்கள் போன்று செயல்படுகின்றன. பள்ளி நேரங்களில் பாடங்களை நடத்தாமல் நீட் தொடர்பான பயிற்சி நடத்தப்படுகிறது. தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்தும் சட்டத்தில் வாரியம் என்று உள்ளது. எனவே, சி.பி.எஸ்.இ-யை இந்தச் சட்டம் கட்டுப்படுத்துமா?’ என கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதில் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்,``தனியார் பள்ளிகள் விடுமுறை நாள்களைத் தவிர பள்ளி நாள்களில் நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தினால் பள்ளி மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். பள்ளி அங்கீகாரம் ரத்து செய்யப்படும்.  மேலும், சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மத்திய அரசின் அனுமதி மட்டும் பெற்றால் போதாது, மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தச் சட்டத்தின்படி தடையின்மைச் சான்றிதழ் பெற வேண்டும்’ என்று பதில் அளித்தார்.