‘கைது செய்வதால் சாதித்துவிட முடியாது!’ - கொந்தளித்த வளர்மதி

எட்டுவழி பசுமைச்சாலை திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தற்காகக் கைது செய்யப்பட்ட மாணவி வளர்மதி இன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

வளர்மதி

சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலை திட்டத்துக்கு நிலம் எடுத்துக்கொண்டிருக்கும்போது கடந்த 19-ம் தேதி ஆச்சாங்குட்டப்பட்டியில் உள்ள பாதிக்கப்பட்ட மக்களிடம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதி பேசிக்கொண்டிருந்தார். அப்போது காவல்துறையினர் அவரைக் கைது செய்தனர். பின்னர், அரசு ஊழியர்களைப் பணி செய்யவிடாமல் தடுத்தது,  ஊழியர்களை மிரட்டியது போன்ற வழக்குகள் அவர் மீது பதிவுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. அதையடுத்து 15 நாள்கள் கழித்து இன்று வளர்மதி ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

சேலம் மத்திய சிறையில் இருந்து வெளியே வந்த வளர்மதி பேசுகையில், ``ஆளும் அ.தி.மு.க., அரசு ஒட்டுமொத்தமாக அனைவரையும் காவல்துறையைக் கொண்டு மிரட்டி அச்சுறுத்தி மத்திய அரசின் திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் நமக்குக் கொடுத்திருக்கும் உரிமையை வழங்காமல் பேச்சுரிமைக்கும் கருத்துரிமைக்கும் எதிராக தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நான் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்துப் பேசியதில் என்ன குற்றம் இருக்கிறது. நிகழ்ச்சிகளில் கலந்து பேசியதற்கெல்லாம் வழக்கு போட்டு சிறையில் தள்ளுகிறார்கள். மத்திய அரசுக்கு அடிபணிந்து எடப்பாடி பழனிசாமி அரசு செயல்பட்டு வருகிறது. கைது செய்வதால் சாதித்து விடலாம் என்று நினைப்பது தவறு. இப்படி தொடர்ந்து அடக்குமுறையை ஏவினால் அது மிகப்பெரிய போராட்டமாக உருவெடுக்கும்'' என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!