வெளியிடப்பட்ட நேரம்: 20:00 (05/07/2018)

கடைசி தொடர்பு:20:00 (05/07/2018)

`பாம்பன் ரயில் பாலம் சீரமைப்புப் பணி எப்போது?’ - ரயில்வே பொது மேலாளர் தகவல்

பாம்பன் ரயில் பாலத்தில் மேற்கொள்ள இருக்கும் சீரமைப்புப் பணிகள் அடுத்த ஆண்டு தொடங்கும் எனப் பெங்களூர் ரயில் சக்கர தொழிற்சாலை பொது மேலாளர் அகர்வால் தெரிவித்தார். 

பாம்பன் ரயில் பாலத்தை பார்வையிட்ட ரயில் சக்கர தொழிற்சாலை ஜி.எம்.

ராமேஸ்வரம் தீவை நாட்டின் நிலப்பரப்புடன் இணைக்கும் வகையில் இருந்துவருவது பாம்பன் ரயில் பாலம். 1914-ம் ஆண்டில் ஆங்கிலேயர்களால் அமைக்கப்பட்ட இந்த ரயில் பாலம் நூறு ஆண்டுகளை கடந்தும் உறுதியோடு உள்ளது. இந்தப் பாலத்தின் நடுவே கப்பல்கள் செல்லும் வகையில் ஹெர்ஷர் தூக்குப் பாலம் உள்ளது. இதை முற்றிலும் மனித சக்தியைக் கொண்டு இயக்குவதன் மூலம் பாலம் இரண்டாகப் பிரிந்து கப்பல்கள் செல்ல வழிவிடும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. அதிகமான உப்புத்தன்மை கொண்ட கடலின் மேல் இந்தப் பாலம் அமைந்துள்ளதால் அதிகமான அரிமானத்திற்கு உள்ளாகிறது. இதனை தடுக்க ஆண்டு தோறும் பாலத்தின் இரும்பு காரிடர் மற்றும் தூக்கு பாலத்திற்கு ரசாயண வண்ணம் தீட்டப்பட்டு வருகிறது. பாம்பன் பாலத்தில் தற்போது உள்ள ஹெர்ஷர் தூக்குப் பாலத்துக்கு மாற்றாகப் புதிய தூக்குப் பாலம் ரூ.34 கோடி செலவில் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், இன்று பாம்பன் ரயில் பாலத்தைப் பார்வையிட வந்திருந்த பெங்களூரில் உள்ள ரயில் சக்கர தொழிற்சாலையின் பொது மேலாளர் ஓ.பி.அகர்வால் ''ரூ.34 கோடி செலவில் பாம்பன் ரயில் பாலத்தைச் சீரமைக்கும் பணிகளும். தூக்குப் பாலத்தைச் சீரமைக்கும் பணிகளும் அடுத்த ஆண்டு தொடங்கும். இதன் பின்னர் பாலத்தில் ரயில் செல்லும் வேகத்தை அதிகரிப்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு அதிகாரிகள் முடிவு செய்வார்கள்'' என்றார்.