வெளியிடப்பட்ட நேரம்: 20:10 (05/07/2018)

கடைசி தொடர்பு:20:10 (05/07/2018)

மணமக்களைக் காக்கவைத்த நிறுவனம்! - இழப்பீடு வழங்க உத்தரவிட்ட நீதிமன்றம்

திருமணத்துக்குக் குறித்த நேரத்தில் சொகுசுக் காரை அனுப்பாத தனியார் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட மணமக்களுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

நீதிமன்றம்

அஹமதாபாத்தைச் சேர்ந்தவர் குலாம் ரசூல் வோரா (Ghulam Rasul Vohra). இவர் கடந்த 2016 -ம் ஆண்டு நவம்பர் மாதம் தனது மகனுக்கு திருமணத்தை நடத்தியுள்ளார். திருமணத்தின்போது மணமக்களை அழைத்து செல்வதற்காக தனியார் நிறுவனத்தில் சொகுசுக் கார் ஒன்றை புக் செய்துள்ளார். ஒரு நாள் வாடகையாக ரூ.24,000 என கூறியுள்ளனர். ரசூல் முன்பணமாக ரூ.5000 செலுத்தியுள்ளார். திருமணம் முடிந்து நீண்ட நேரமாக காத்திருந்தும் சம்பந்தப்பட்ட நிறுவனம் வாகனத்தை அனுப்பவில்லை. கடைசியில் மணமக்கள் வேறு வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். இதனால் ஆத்திரமடைந்த ரசூல் அந்நிறுவனத்தை அணுகி இதுகுறித்து விசாரித்துள்ளார். நிறுவனத்தின் தரப்பில் இருந்து உரிய பதில் அளிக்கவில்லை. இதனையடுத்து, ரசூல் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகினார். 

தனியார் நிறுவனத்தின் பொறுப்பற்ற நடவடிக்கையால் மகனின் திருமண நாளில் உறவினர்கள் முன்னிலையில் தலைக்குனிவைச் சந்திக்க நேரிட்டது. இது தனக்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக, ரசூல் நீதிமன்றத்தில் முறையிட்டார். மேலும் வாகனத்தை அனுப்பாத தனியார் நிறுவனம் தனக்கு ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என வழக்கு தொடுத்தார். இதை விசாரித்த நீதிமன்றம் தனியார் நிறுவனத்திடம் விளக்கம் கேட்டது. தனியார் நிறுவனத்தின் விளக்கம் திருப்திகரமானதாக இல்லாததால் ரசூலுக்கு ரூ.25,000 இழப்பீடு வழங்க உத்தரவிட்டு நுகர்வோர் நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.