வெளியிடப்பட்ட நேரம்: 20:30 (05/07/2018)

கடைசி தொடர்பு:20:30 (05/07/2018)

`தேசியகீதத்தை அவமதித்தார்களா மாணவர்கள்?' - சர்ச்சையில் காஷ்மீர் மத்தியப் பல்கலைக்கழகம்

காஷ்மீர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள் தேசிய கீதத்தை அவமதித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தேசிய கீதம் இசைக்கப்பட்டபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தாமல், சில மாணவர்கள் இருக்கையில் அமர்ந்தபடி இருக்கும் வீடியோ காட்சி இணையதளத்தில் வெளியாகியுள்ளது. 

காஷ்மீர் மத்திய பல்கலைக்கழகம்

(Photo Credit: ANI)

காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் உள்ள காஷ்மீர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் அண்மையில் பட்டமளிப்பு விழா நடந்தது. விழா முடிவில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. பெரும்பாலான மாணவர்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அப்போது, ஒரு சில மாணவர்கள் மட்டும் எழுந்து நிற்காமல், இருக்கையில் அமர்ந்துள்ளனர். இந்தக் காட்சியை அங்கிருந்த ஒருவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்துள்ளார். அவர் எடுத்த வீடியோ, தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. மாணவர்களின் இந்தச் செயலுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றன. சில மாணவர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்து வருகின்றனர். 

இந்த நிலையில், காஷ்மீர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர்கள் மீது எழுந்த இந்தக் குற்றச்சாட்டை, கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளதாக ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், `பட்டமளிப்பு விழாவில் தேசிய கீதம் இசைத்தபோது சில மாணவர்கள் இருக்கையில் அமர்ந்திருப்பதுபோல் வெளியான வீடியோ காட்சிகள் போலியானவை. கல்லூரியின் பிரதான அரங்கில்தான் பட்டமளிப்பு விழா நடந்தது. அப்போது, அனைத்து மாணவர்களும் நிகழ்ச்சி விருந்தினர்களும் தேசிய கீதம் இசைத்தபோது எழுந்து நின்று மரியாதை செலுத்தினர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.