`எம்.எல்.ஏ-வாக இருக்கிறது எவ்வளவு கஷ்டம் தெரியுமா?’ - எம்.எல்.ஏ நேருவின் புலம்பல்

எம்.எல்.ஏ-வாக இருந்தால்தான், அதன் கஷ்டம் புரியும் எனத் திமுக எம்.எல்.ஏ கே.என்.நேரு சட்டப்பேரவையில் பேசியது சிரிப்பலையை ஏற்படுத்தியது.

நேரு

வழக்கமான சட்டப்பேரவை கூட்டத்தொடர் இந்த ஆண்டு சற்று மாற்றத்துடன் காணப்படுகிறது. இதற்குக் காரணம் எம்.எல்.ஏ-க்களின் சுவாரஸ்யமான பேச்சுகள்தான். சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைத்தலைவர் துரைமுருகனின் கலகலப்பான பேச்சுகள், முதலமைச்சருக்கு அ.தி.மு.க-வினர் சூட்டும் வித்யாசமான பட்டங்கள் எனப் பேரவையில் தினசரி சுவாரஸ்ய நிகழ்வுகள் பல அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் இன்றைய விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் எம்.எல்.ஏ பாண்டி, `எம்.எல்.ஏ-க்கள் எங்கு சென்றாலும் மரியாதையில்லை; அவர்களுக்கென தனி அதிகாரம் வழங்க வேண்டும்’ எனத் தெரிவித்தார். தி.மு.க எம்.எல்.ஏ கே.என்.நேரு பேசுகையில் `சட்டமன்ற உறுப்பினராக இருப்பது அவ்வளவு எளிதல்ல. எம்.எல்.ஏ-க்களின் ஊதியத்தை அனைவரும் விமர்சித்து வருகின்றனர்.

ஓபிஎஸ்

தொகுதி பிரச்னை, கல்யாணம், பொதுநிகழ்ச்சி, கிரிக்கெட், சடுகுடு என நாங்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிக்கு ஆகும் செலவுக்கான பில்லை கொடுக்கிறோம். எங்களுக்கு சம்பளம் வேண்டாம்; மாறாகப் பில்லின் தொகையைக் கொடுத்தாலே போதும். எம்.எல்.ஏ-வாக இருந்தால்தான் அதன் கஷ்டம் புரியும்’ என பேசியது பேரவையில் அனைவரிடத்திலேயும் சிரிப்பை வரவழைத்தது. தொடர்ந்து பேசிய அவர், தமிழகத்தின் கடன் 3.56 லட்சம் கோடியாக உயர்ந்திருப்பதைச் சுட்டிக்காட்டினார். இதற்குப் பதிலளித்துப் பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், `செலவுகளால் ஏற்பட்ட உயர்வைச் சமாளிக்கக்கூடிய அளவுக்கு வருவாயில் உயர்வில்லை. மதுக்கடை வருமானம் கணிக்கப்பட்ட அளவு கிடைக்காததால் கடன்சுமை அதிகரித்துள்ளது. கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் அதிகரித்த காரணத்தால், எந்தப் பிரச்னையும் இல்லை, யாரும் கவலைப்பட வேண்டாம்’ எனத் தெரிவித்தார்.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!