கறுப்பு உடையில் காலித் தட்டு ஏந்தி சத்துணவு ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்!

தூத்துக்குடி மாவட்ட, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கறுப்பு உடை அணிந்து கையில் காலித் தட்டு ஏந்தி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டனர். 

சத்துணவு

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாக்குறுதியை நிறைவேற்ற மறுக்கும் இன்னாள் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 8-வது ஊதிய மாற்றுப் பரிந்துரையின்படி குறைந்தபட்ச பென்சன் அதாவது ரூ.7,850 குடும்ப ஓய்வூதியமாக அகவிலைப்படியுடன் வழங்கிட வேண்டும். இலவச பஸ் பாஸ், மருத்துவப்படி, பொங்கல் போனஸ்  ஆகியவற்றை வழங்கிட வேண்டும். ஈமக்கிரியை செலவுத் தொகையாக ரூ.25,000 வழங்கிட வேண்டும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஓய்வு பெற்றோருக்கு இதுநாள் வரை வழங்கப்படாத பணி ஓய்வு உத்தரவை உடனடியாக வழங்கிட வேண்டும். ஓய்வுபெற்ற சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஒட்டுமொத்த ஓய்வூதியத் தொகை, எஸ்.பி.எப். மற்றும் பணப்பலன்களைத் தாமதமின்றி வழங்கிட வேண்டும். அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு மாதா மாதம் பென்சன் வழங்காமல் அலைக்கழிக்கும் போக்கினைக் கைவிட்டு பென்சன் தொகை வழங்கிட வேண்டும்.

தணிக்கைத் தடை என்ற பெயரில் ஒட்டுமொத்த ஒய்வூதியத்தில் விதிமுறைகளுக்குப் புறம்பாக 10% பிடித்தம் செய்ததைக் கைவிட்டு திரும்ப வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியர்கள், கறுப்பு உடை அணிந்து காலித் தட்டு ஏந்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!